சொத்துக் குவிப்பு விசாரணை: மூத்த பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைப்பு!
வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியமைக்குப் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பிரதம பொலிஸ் பரிசோதகர் (CIP) வருணி போகஹவத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை (6) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட அவர், கடந்த செவ்வாய்க்கிழமை (3) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றிய வருணி போகஹவத்தவிடம் இருந்த சொகுசு வாகனம் ஒன்றையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அண்மையில் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், குறித்த வாகனத்திற்கான குத்தகைத் தவணைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த பொலிஸ் அதிகாரியின் மாதாந்தச் சம்பளம் 1,40,000 ரூபாயாக இருந்த நிலையில், அவர் பயன்படுத்திய வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவு மாத்திரம் 1,32,000 ரூபாயாக இருந்துள்ளதாக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கும், அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதி எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.