சில்க் ஸ்மிதாவின் நிறைவேறாத ஆசை: நடிகை குஷ்பு உருக்கம்
மறைந்த தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகை சில்க் ஸ்மிதா, ஒரு இயல்பான குடும்ப வாழ்க்கையையே பெரிதும் விரும்பினார் என்றும், ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய்விட்டது என்றும் நடிகை குஷ்பு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியச் சினிமாவில் 1980-களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் சில்க் ஸ்மிதா. அண்மையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நடிகை குஷ்பு, தனது நெருங்கிய தோழியான சில்க் ஸ்மிதாவுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்ததாவது:
"சில்க் ஸ்மிதா தனது கண்களையும் உடலையும் திரையில் எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்க்கமாக அறிந்திருந்தார். நான் அவரை ஒருபோதும் ‘சில்க்’ என்றோ ‘ஸ்மிதா’ என்றோ அழைத்ததில்லை. விஜயலட்சுமி என்ற அவரது இயற்பெயரின் சுருக்கமான ‘விஜி’ என்றே அழைப்பேன். அப்படி அழைக்கும்போதெல்லாம் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைவார்.
எங்களின் முதல் சந்திப்பு எனக்கு இன்றும் நினைவிலிருக்கிறது. அன்று படப்பிடிப்புத் தளத்தில் திடீரென அமைதி நிலவியது. சிறப்பு வசதிகளுடன் அவர் வந்து அமர்ந்தபோது, அவரது வசீகரமும் தனித்துவமான ஆளுமையும் என்னை மிகவும் ஈர்த்தன. உடைந்த ஆங்கிலத்தில் அவர் பேசினாலும், என்னை மிகவும் இயல்பாக உணர வைத்தார்.
சமூகம் அவரை தவறாகப் புரிந்துகொண்டது. அவர் எப்போதும் தனித்தே காணப்பட்டதால், பலர் அவரை அகந்தை பிடித்தவர் எனக் கருதினர். ஆனால், திரையுலகில் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், எல்லைகளை வகுத்துக்கொள்ளவும் அவர் பயன்படுத்திய ஒரு பாதுகாப்பு முறையே அதுவாகும்.
அவர் திரைக்கு வெளியே ஓர் இயல்பான மனைவியாகவும், குடும்பத் தலைவியாகவும் வாழவே பெரிதும் ஆசைப்பட்டார். ஆனால், அவர் உறவில் இருந்த நபரால் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், தனது காதலரின் குழந்தைகளுக்காக மிகுந்த ஆசையோடு பொருட்களை வாங்குவார். எனினும், அவர் கனவு கண்ட அந்த அமைதியான குடும்ப வாழ்க்கை கடைசி வரை அவருக்குக் கிடைக்காமலேயே போய்விட்டது" என குஷ்பு தெரிவித்தார்.
துணை நடிகையாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்த விஜயலட்சுமி, 1979-ஆம் ஆண்டு வெளியான ‘வண்டிச்சக்கரம்’ திரைப்படத்தில் ‘சில்க்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார்.
தனது 18 ஆண்டுகாலத் திரைப் பயணத்தில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் திகழ்ந்தார். தென்னிந்தியச் சினிமாவில் தனக்கென தனிமுத்திரை பதித்த சில்க் ஸ்மிதா, கடந்த 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.