லெனின் பாண்டியன்: 4 நாட்கள் வெயிலில் நின்று பயிற்சி பெற்ற தர்ஷன்!
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் தான் ஏற்றுள்ள காவல்துறை கதாபாத்திரத்தின் இயல்புத் தன்மையைக் கொண்டுவருவதற்காக, மதுரையின் கடும் வெயிலில் 4 நாட்கள் தொடர்ந்து நின்று பயிற்சி பெற்றதாக நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.
டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 'சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்குகிறார். இதில் கங்கை அமரன், ரோஜா மற்றும் ஸ்ரத்தா ராவ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதிகார வர்க்கத்திற்கு எதிராக இரண்டு சாதாரண மனிதர்கள் முன்னெடுக்கும் நீதிக்கான போராட்டத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்புப் பணிகள் மற்றும் தனது கதாபாத்திரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் தர்ஷன்:
"புனே நகரில் நடிப்புப் பயிற்சி பெற்ற பின்னர், சில விளம்பரப் படங்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்து வந்தேன். ஆரம்பத்தில் திரைப்படங்களுக்கான நேர்முகத் தேர்வுகளில் நிராகரிக்கப்பட்டதால், என்னை மேலும் தயார்படுத்திக் கொண்டு, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இக்கதையைத் தேர்வு செய்தேன்.
இப்படத்தில் நான் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளேன். அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வகையில், மதுரை காவல் நிலையம் ஒன்றிற்குச் சென்று, நாள் முழுவதும் அங்கிருக்கும் காவலர்களின் செயற்பாடுகளையும் உடல் மொழியையும் நேரில் அவதானித்தேன்.
மேலும், மதுரையின் களப்பின்னணியைக் கொண்ட கதை என்பதால், எனது உடலமைப்பும் தோற்றமும் இயல்பாக மாறுவதற்காக மதுரை அருகே 4 நாட்கள் கடும் வெயிலில் நின்றேன். அத்துடன் மதுரை வட்டார வழக்கிலும் பேசச் சிறப்புப் பயிற்சி பெற்றேன். தற்போது திரையில் என்னைப் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமான ஒரு உணர்வு ஏற்படுகிறது" எனக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களிலும், பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.