ஹாலிவுட்டில் ரீமேக்காகும் ‘மகாராஜா’: சம்பளமின்றி நடிக்கத் தயார் என விஜய் சேதுபதி விருப்பம்!
ஹாலிவுட்டில் மறுஆக்கம் (Remake) செய்யப்படவுள்ள ‘மகாராஜா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்திலாவது நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அடுத்த படத்தினை எந்தவித ஊதியமும் பெறாமல் நடித்துத் தருவதாகத் தயாரிப்பாளரிடம் தெரிவித்ததாகப் பிரபல நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"மகாராஜா திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்துப் பேசுவதானால், அதன் இயக்குநர் நித்திலன் சாமிநாதனையே சாரும். அவருடைய எழுத்துத் திறமை மிகவும் அபாரமானது. அண்மையில் ‘மகாராஜா 2’ திரைப்படத்திற்கான கதையையும் என்னிடம் கூறினார். அதுவும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
இத்திரைப்படம் இந்த அளவிற்குப் சர்வதேச அளவில் கவனம் பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுதன் என்னைத் தொடர்புகொண்டு, ‘மகாராஜா’ படத்தின் ஹாலிவுட் மறுஆக்க உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கோனஹி இதில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறியதும் எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.
அப்போது, அந்த ஹாலிவுட் திரைப்படத்தில் எனக்கு ஒரு சிறிய வாய்ப்பாவது வாங்கித் தருமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு ஈடாக, எனது அடுத்த திரைப்படத்தில் ஊதியம் ஏதுமின்றி இலவசமாக நடித்துத் தருவதாகவும் கூறினேன். எனக்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது நடக்குமா என்று தெரியவில்லை; இருப்பினும், நான் நடித்த திரைப்படம் ஒன்று ஹாலிவுட் வரை செல்வது பெரு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அனைத்துப் பெருமையும் இயக்குநர் நித்திலனையே சாரும்" எனத் தெரிவித்தார்.
இதேவேளை, விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. தந்தை - மகள் இடையிலான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.