சூர்யா - ஜோதிகா 20-வது திருமண நாள்: உணர்வுபூர்வமான உறுதிமொழிப் பதிவு!
திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர், தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டுத் தங்களின் திருமண உறுதிமொழிகளை மீண்டும் புதுப்பித்துக்கொண்ட உணர்ச்சிப்பூர்வமான தருணங்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சூர்யா - ஜோதிகா தம்பதியின் திருமணம் நடைபெற்றது. திரையுலகில் வெற்றிகரமான தம்பதிகளாக வலம் வரும் இவர்கள், நடப்பு ஆண்டில் தங்களது 20-வது திருமண ஆண்டை எட்டியுள்ளனர்.
இதனையொட்டி, தங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையான அதேவேளை உணர்வுபூர்வமான நிகழ்வொன்றை இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஜோதிகாவை அவருடைய மகன் தேவ் கைபிடித்து அழைத்து வர, சூர்யாவை மகள் தியா அழைத்து வந்துள்ளார். வெள்ளை நிற ஆடைகளில் காட்சியளித்த இருவரும், மீண்டும் ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு திருமண உறுதிமொழிகளைப் புதுப்பித்துக்கொண்டனர்.
இதுதொடர்பான காணொளியை (Video) இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிர்ந்த ஜோதிகா, "எங்களின் 20 ஆண்டு கால அன்பையும் சண்டைகளையும் கொண்டாடும் விதமாக, இந்த உறுதிமொழிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறோம். இது பரிபூரணமான திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல; மாறாக விட்டுக்கொடுத்தல், புரிதல், தியாகம் மற்றும் சுயநலமற்ற நேசத்தின் அடையாளம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இக் கொண்டாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், "எங்கள் சிறப்பான நாளின் சில நினைவூட்டும் தருணங்கள்" எனக் குறிப்பிட்டு, இந்நிகழ்வை மறக்க முடியாததாக மாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்த இவர்கள், திரையிலும் நிஜத்திலும் ரசிகர்களின் பெருவாரியான அன்பைப் பெற்ற தம்பதிகளாகத் திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.