‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ்!
திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது அடுத்த கட்டத் திரைப்படப் பயணமாக ‘மஹாவீர் கர்ணா’ (Mahavir Karna) எனும் பிரமாண்ட வரலாற்றுப் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இத்திரைப்படம் தொடர்பான மகிழ்ச்சியான செய்தியை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"நமது புராணங்களில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் போற்றத்தக்க கதாபாத்திரமான கர்ணனின் பாத்திரமேற்று நடிப்பதில் பெருமகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் அடைகிறேன். இத்தகையதொரு மகத்தான திரைக்கதை என்னை நாடி வரும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த அரிய வாய்ப்பை சாத்தியமாக்கித் தந்த இயக்குநர் ரமேஷ் வர்மாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பணிவுடனும் நன்றியுடனும் இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கும் எனக்கு, உங்கள் அனைவரது அன்பும் ஆசீர்வாதமும் என்றும் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இத்திரைப்படத்தின் முதற்றோற்றப் (First Look) சுவரொட்டியையும் அவர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, படத்தின் இயக்குநர் ரமேஷ் வர்மா தனது சமூகவலைத்தளப் பதிவில், "ஒரு கம்பீரமான முகம், ஆளுமைமிக்க வீரன் – 'மஹாவீர் கர்ணா'வாக ராகவா லாரன்ஸ் உருவெடுக்கிறார். புகழ்பெற்ற புராண நாயகனாக அவர் அடி எடுத்து வைப்பது திரைப்பட உலகிற்குப் புதிய அனுபவமாக அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘பென் மூவீஸ்’, ‘ஸ்ரீநீலத்ரி புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘ஆர்வி ஸ்டூடியோஸ்’ ஆகிய பிரபல நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ராம்ஜி டாட் ஒளிப்பதிவு செய்கிறார். ஞானி இசையமைக்க, ஸ்ரீமணி வசனங்களை எழுதுகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து முதன்மை இந்திய மொழிகளில் பான்-இந்தியத் திரைப்படமாக உருவாக்கப்படும் ‘மஹாவீர் கர்ணா’, வரும் 2027ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.