தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சை: 'மண்டாடி' பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம்
தெலுங்கு ரசிகர்கள் மற்றும் தெலுங்கு மக்கள் குறித்து தாம் பேசிய கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக ‘மண்டாடி’ திரைப்படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, இப்படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் சுஹாஸ், அவரது தோலின் நிறம் காரணமாக எதிர்கொண்ட இனவெறிப் பேச்சுக்கள் குறித்துப் பேசியிருந்தார். இயக்குநரின் இந்த பேச்சு தெலுங்கு ரசிகர்களையும் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகையும் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இணையதளங்களில் விவாதங்கள் உருவெடுத்தன.
இந்த நிலையில், எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவான விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
"'மண்டாடி' திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் சுஹாஸ் தனது தோலின் நிறம் காரணமாக எதிர்கொண்ட இனவெறி அடிப்படையிலான விமர்சனங்கள் குறித்து நான் பேசியிருந்தேன். சுஹாஸை அவ்வாறு அநாகரிகமாகப் பேசிய குறிப்பிட்ட அந்த நபரையும், அவர் கூறிய வார்த்தைகளையுமே நான் சுட்டிக்காட்டினேனே தவிர, தெலுங்கு மக்கள், தெலுங்கு ரசிகர்கள் அல்லது ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகைக் குறிப்பிடும் நோக்கம் எனக்குச் சிறிதும் இல்லை.
இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவிலேயே, இன்றைக்கு இந்திய அளவில் தெலுங்குத் திரையுலகமே முன்னணியில் உள்ளது என்றும், தெலுங்கு சினிமா மற்றும் ரசிகர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றும் பகிரங்கமாகத் தெரிவித் திருந்தேன்.
என் மீதும் எனது 'மண்டாடி' திரைப்படத்தின் மீதும் அளப்பரிய அன்பு செலுத்திய மக்களுக்கு எதிராக நான் ஒருபோதும் பேசமாட்டேன். எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக நான் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தெலுங்குத் திரையுலகம் மற்றும் தெலுங்கு மக்களின் மீதான எனது அன்பு என்றும் மாறாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி நடிகருக்கு ஆதரவாக எழுந்த குரல்:
முன்னதாக, செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, "படப்பிடிப்பின் போது சுஹாஸ் அவர்களிடம் பேசுகையில், தாம் கருப்பாக இருப்பதால் திரையுலகில் சாதிக்க முடியுமா என்று சிலர் தன்னிடம் கேட்டதாக வருத்தப்பட்டார். அதற்கு, படம் வெற்றிபெறும்போது மேடையில் பதில் சொல்வதாக நான் உறுதியளித்திருந்தேன்.
தோலின் நிறத்தைக் கொண்டு ஒருவரது திறமையை மதிப்பிடும் நபர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், இதுபோன்ற கருத்துகளைத் தமிழகத்தில் பேசாதீர்கள். தமிழகத்தில் அனைத்து மக்களும் சுஹாஸை ஏற்றுக்கொண்டுள்ளனர்" என்று பேசியிருந்தார்.
தற்போது இயக்குநர் அளித்த தெளிவான விளக்கத்தைத் தொடர்ந்து, இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.