சிறுநீரக நோயாளிகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான மருந்துகள் கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்
சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்துகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, முறையே 990 மில்லியன் ரூபா மற்றும் 702,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இரண்டு மருந்துக் கொள்வனவு ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தீவிர மற்றும் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து அடங்கிய 11 இலட்சம் பைகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையின்போது நோயாளர்களின் உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுவதற்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் இதற்காக இரண்டு விலைமனுக்கள் கிடைத்துள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ததுடன், உயர்மட்ட கொள்வனவுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, 990 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தை இலங்கையைச் சேர்ந்த Infuxion Lanka (Private) Limited நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
குறித்த மருந்துகளை மலேசியாவைச் சேர்ந்த Peritone Health SDN BHD நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது.
இதேவேளை, கிரிப்டோகொக்கல் மூளைக்காய்ச்சல் (Cryptococcal Meningitis) மற்றும் உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ் (Visceral Leishmaniasis) உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Liposomal Amphotericin B மருந்தையும் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, தலா 50 மில்லிகிராம் அளவுடைய 54,000 மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்வனவுக்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் மூன்று விலைமனுக்கள் கிடைத்துள்ளன. உயர்மட்ட நிரந்தர கொள்வனவுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, இந்தியாவைச் சேர்ந்த Gufic Biosciences Ltd நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
702,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தில், விமானப் போக்குவரத்து மூலம் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் சரக்குக் கட்டணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த மருந்துகளையும் Gufic Biosciences Ltd நிறுவனமே உற்பத்தி செய்யவுள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரின் சமர்ப்பிப்புகளுக்கு அமைய, உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்த குறைந்த விலைமனுக்களைச் சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு இந்த இரண்டு ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.