கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டக் கொட்டகைக்கு தீ வைப்பு – மர்ம நபர்கள் குறித்து விசாரணை கோரிக்கை
முல்லைத்தீவு – கேப்பாபிலவில் தமது பூர்வீகக் காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி, பொதுமக்களால் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக் கொட்டகை இன்று திங்கட்கிழமை (02) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான காணிகளில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, அதற்கான விடுவிப்பு ஆவணம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. எனினும், விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட குறித்த காணிகள் இதுவரையில் உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கேப்பாபிலவு காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களில் கணிசமானோர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திலும் பங்கேற்றிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டக் கொட்டகை தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, தீ வைக்கப்பட்டதற்கான காரணத்தையும் பின்னணியையும் கண்டறிந்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.