காசா பகுதியில் ஹமாஸ் சுரங்கத்தை அழிக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறைவு
காசாவின் மத்திய பகுதியில் ஹமாஸ் அமைப்புக்குச் சொந்தமானதாகச் சந்தேகிக்கப்படும் சுரங்கப்பாதையை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட டாங்கி இராணுவ நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அமுலுக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் மஞ்சள் எல்லைக் கோட்டைத் தாண்டி இஸ்ரேல் இராணுவம் முன்னெடுத்துள்ள முக்கியமான தரைவழி நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
இது தொடர்பாக வியாழக்கிழமை காசா மக்களுக்கு பேஸ்புக் ஊடாக வெளியிட்ட அறிவிப்பில், ஹமாஸ் அமைப்பின் உட்கட்டமைப்புக்கு எதிரான நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், காசாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் பிரதான சலாஹுதீன் வீதி மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வியாழக்கிழமையும் குறித்த பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வீதியில் வாகனப் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை இஸ்ரேல் இராணுவ டாங்கிகள் குறித்த வீதியில் முன்னேறியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசித்த பாலஸ்தீனியக் குடும்பங்கள் பாதுகாப்புத் தேடி வெளியேறியிருந்தன. கடந்த 2025 ஒக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பின்னர், மஞ்சள் எல்லைக் கோட்டுக்கு அப்பால் இஸ்ரேல் இராணுவம் இவ்வாறான நடவடிக்கையைப் பகிரங்கமாக அறிவித்தது இதுவே முதல் முறையாகும்.
புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, இஸ்ரேல் படையினருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படும் சுரங்கப்பாதையை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மீண்டும் பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தில், ஏற்கனவே பலமுறை இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனியக் குடும்பங்கள் தங்களது உடைமைகளை மிதிவண்டிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளன.
இதன்படி, புதன்கிழமை மாத்திரம் சுமார் 6,000 பேர் குறித்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ளதாக ஹமாஸ் நிர்வாகத்தின் கீழுள்ள காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு மீண்டும் ஒன்றிணைந்து ஆயுதங்களைச் சேகரித்து வருவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அந்த அமைப்புக்கு எதிரான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
எனினும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் 2025 ஒக்டோபரில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சிப்பதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் அமெரிக்க ஆதரவிலான அமைப்பும், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தமது கடப்பாடுகளை இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் நிறைவேற்றத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
காசாவின் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலானோர் தற்போது அந்தப் பிரதேசத்தின் மூன்றில் ஒரு பகுதியிலேயே வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் தற்காலிக கூடாரங்களிலும் சேதமடைந்த கட்டடங்களிலும் தங்கியுள்ளனர்.
மறுபுறம், இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காசாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் பெருமளவில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
இந்த இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 74,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 2025 ஒக்டோபர் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 1,600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஐந்து இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.