தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!
தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, பீட்டர்மாரிட்ஸ்பர்க் (Pietermaritzburg) நகருக்கு வெளியேயுள்ள ஸ்வீட்வாட்டர்ஸ் (Sweetwaters) பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கூடிய வாகனமொன்றிலிருந்து எட்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பின்னர், தென்னாப்பிரிக்காவின் தலைநகரான பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஜெஃப்ஸ்வில்லே (Jeffsville) என்ற குடியிருப்புப் பகுதியில் மேலும் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள தற்காலிக குடியிருப்பொன்றின் குடிசைக்குள் ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரு சம்பவங்களும் சுமார் 530 கிலோமீற்றர் இடைவெளியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தேசிய பொலிஸ் ஆணையாளர் ஃபன்னி மசெமோலா திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட அவர், குற்றவாளிகளைக் கண்டறிந்து சமூகங்களை அச்சுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் தாக்குதலா? விசாரணை தீவிரம்
தென்னாப்பிரிக்காவில் ஏற்கனவே வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அண்மைக்காலமாக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் குழுத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கௌடெங் மாகாண பொலிஸ் ஆணையாளர் டொம்மி ம்தொம்பெனி, உயிரிழந்தவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு அருகிலுள்ள சால்ஸ்வில்லே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணையில் முக்கிய நபராக அடையாளம் காணப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 13 பேர் காயமடைந்திருந்தனர்.
எனவே, தற்போதைய சம்பவத்திற்கும் முந்தைய தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், இது பழிவாங்கும் நோக்கிலான தாக்குதலாக இருக்கக்கூடும் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த குடியிருப்பில் நள்ளிரவுக்கு சற்று முன்னர் இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், உறவினர் ஒருவரைத் தேடி குடிசைக்குள் சென்ற சிறுவனே சடலங்களைக் கண்டறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, பீட்டர்மாரிட்ஸ்பர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் சில குடும்பங்கள் பொலிஸாருக்கு உதவி வருவதாகப் பொலிஸ் பேச்சாளர் ரொபர்ட் நெட்ஷியுண்டா தெரிவித்துள்ளார்.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் காரணங்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.