கல்வியை இடைநிறுத்திய 27 மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளில் இணைப்பு: கிராண்ட்பாஸ் பொலிஸார் நடவடிக்கை
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் கல்வியை இடைநிறுத்தியிருந்த 27 சிறுவர்கள், கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சமூகப் பொலிஸ் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த மாணவர்களைப் பாடசாலைகளில் மீண்டும் சேர்ப்பதற்கு முன்னதாக, கடந்த நவம்பர் 1ஆம் திகதி மாணவர்களும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இதன்போது, கொழும்பு வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான ஆலோசனைகளும் ஊக்குவிப்புகளும் வழங்கப்பட்டதுடன், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் திஸாநாயக்க மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் சார்ஜன்ட் சமரவிக்ரம ஆகியோரின் முன்னெடுப்பில் ஏற்கனவே கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை செல்லாத நிலையில் இருந்த சுமார் 30 சிறுவர்கள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டிருந்தனர்.
சமூகத்தில் தவறான நடத்தைகளில் ஈடுபடும் அபாயம் உள்ள சிறுவர்களையும், கல்வியை இடைநிறுத்தியுள்ள சிறுவர்களையும் பொலிஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டு, அவர்களை சமூகப் பொலிஸ் பிரிவின் ஊடாக உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், AEC Property (Pvt) Ltd நிறுவனத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் குணரத்ன ஆகியோர் மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
எனவே, பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள சிறுவர்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்களை அறிந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ள சிறுவர்களை மீண்டும் முறையான கல்வி முறைமைக்குள் கொண்டுவருவதற்கு ஒத்துழைக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.