ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இந்திய நிதி ஆலோசகர் உயிரிழப்பு! இணையத் துன்புறுத்தல் குறித்து விசாரணை
இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சமூக ஊடகப் பின்தொடர்பாளர்களைக் கொண்ட 27 வயதான நிதி ஆலோசகர் ஒருவர், சென்னைக்கு அருகில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ச்சியான இணையவழித் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த வி. ஹரிஷ் (V. Harish) என்ற குறித்த நிதி ஆலோசகர், ‘Finance with Harish’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் நிதி மற்றும் முதலீடு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (ஒக்டோபர் 19) இரவு, சென்னை அருகிலுள்ள முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள வாடகை வில்லா ஒன்றில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹரிஷின் தந்தையான ஜே. விநாயகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான தற்கொலை மரணம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிதி மற்றும் முதலீடு தொடர்பான உள்ளடக்கங்களை வெளியிட்டு வந்த ஹரிஷ், சமூக ஊடகங்களில் பெருமளவான ஆதரவாளர்களைப் பெற்றிருந்தார். எனினும், அவரது நிதி ஆலோசனைகள் மற்றும் தொழில்முறை தகுதிகள் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் மாதம் அவரது சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹரிஷின் தந்தை அளித்த முறைப்பாட்டில், மற்றொரு சமூக ஊடகப் பிரபலமான ஜேசன் சாமுவேல் (Jason Samuel) என்பவர், ஹரிஷை இணையவழியில் துன்புறுத்தியதாகவும், அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் அச்சுறுத்தல்களையும் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் ஹரிஷுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், உயிரிழப்பதற்கு முன்னர் ஹரிஷ் காணொளியொன்றைப் பதிவு செய்ததாகவும், அதில் தனது முடிவுக்கு ஜேசன் சாமுவேலே காரணம் எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜேசன் சாமுவேல் மறுத்துள்ளார். ஹரிஷின் தொழில்முறைத் தகுதிகள் மற்றும் நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கான அதிகாரம் குறித்து நியாயமான கேள்விகளையே தாம் எழுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) உரிய பதிவைப் ஹரிஷ் கொண்டிருக்கவில்லை என்றும், தனது தொழில்முறைத் தகுதிகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கியிருந்ததாகவும் சாமுவேல் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, ஹரிஷ் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்வார் எனத் தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பலரின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து ஹரிஷின் பிரதான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் புதிதாகத் தொடங்கிய கணக்கும் முடக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹரிஷின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கான காரணங்கள், இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் காணொளி ஒன்றைப் பதிவு செய்ததாகக் கூறப்படும் விடயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படும் நிலையில், இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜேசன் சாமுவேலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.