செல்போன் திருட முயன்றவர்... ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய பரபரப்புக் காட்சி!
இந்தியாவின் பிஹார் மாநிலத்தில், ஓடும் ரயிலில் பயணி ஒருவரின் செல்போனைத் திருட முயன்ற நபரின் கைகளைப் பயணிகள் பிடித்துக்கொண்டதால், அவர் ரயிலுக்கு வெளியே தொங்கியபடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பிஹார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்திலுள்ள சிவ்நாராயண்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது.
இதன்போது, ரயில் பெட்டியின் ஜன்னல் வழியாக உள்ளே இருந்த பயணி ஒருவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்றுள்ளார். இதனைக் கவனித்த ரயிலுக்குள் இருந்த பயணிகள் உடனடியாகச் செயல்பட்டு, அந்த நபர் தப்பிச் செல்லாமல் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டனர்.
அப்போது ரயில் நகரத் தொடங்கியதால், பயணிகளின் பிடியில் சிக்கிய அந்த நபர் ரயிலுக்கு வெளியே தொங்கிய நிலையில் சென்றார்.
நடைமேடையில் விழுந்து உயிர் தப்பினார்
ரயில் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும், தன்னை விடுவித்துக்கொள்ள அந்த நபர் கடுமையாகப் போராடினார். ரயில் நிலையத்தில் இருந்தவர்களும் இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது தூரம் ரயிலுடன் இழுத்துச் செல்லப்பட்ட அந்த நபர், பின்னர் நடைமேடையில் விழுந்துள்ளார். இருப்பினும், சிறிய காயங்களுடன் அவர் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் இடம்பெறும் செல்போன் திருட்டு முயற்சிகளால் பயணிகள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
திருட்டு முயற்சியில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைப் பிடிக்க முயற்சிக்கும்போது, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பயணிகள் நடந்துகொள்ளக் கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், ரயில்வே ஊழியர்கள் அல்லது அரச ரயில்வே காவல்துறை (GRP), ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆகியோரிடம் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.