“இடைத்தேர்தலில் பணம் கொடுக்காமல் வெற்றி” – தமிழக வெற்றிக் கழகத்துக்கு அண்ணாமலை பாராட்டு!
தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் பணம் வழங்காமல் இடைத்தேர்தல் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ள ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, இதற்காகத் தமிழக வெற்றிக் கழகத்தைப் பாராட்டியுள்ளார்.
கோவை நீலாம்பூரில் உள்ள பிஎஸ்ஜி ஐடெக் வளாகத்தில், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறம் மற்றும் அரசியல் பயிற்சி மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழக அரசியல் நிலவரம், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள், மின்சாரக் கொள்முதல் மற்றும் தனது அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடத் தயாராகும் அமைப்பு
தமிழகத்தில் நாளையே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றாலும் களமிறங்கத் தமது அமைப்பு தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். இதற்கான பயிற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடிப்படை மாற்றங்களை உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மூலம் அடுத்த ஓராண்டுக்குள் ஒரு இலட்சம் பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து மாறுபட்ட பாதையில் தமது அமைப்பு பயணிப்பதாகத் தெரிவித்த அவர், அமைப்பின் சார்பில் தலைவர்களைத் தேர்தலில் நிறுத்தத் திட்டமிடும்போது கூட்டணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
தவெகவுக்குப் பாராட்டு
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் பணம் வழங்காமல் இடைத்தேர்தல் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, பணப் பட்டுவாடா இன்றி தேர்தல் நடைபெற்றதைப் பாராட்டலாம் என்றார்.
மேலும், புதிதாகப் பலர் சட்டப்பேரவைக்குத் தெரிவாகியிருப்பதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தையும் பாராட்ட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் அரசின் நிறை, குறைகளை மக்களிடம் எடுத்துரைக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மக்களைச் சந்திக்க முதல்வர் விஜய் நேரம் ஒதுக்க வேண்டும்
முதல்வர் விஜய் அடிக்கடி மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.
“முதல்வர் மக்களைச் சந்திக்க வேண்டும். அதற்காக ஒரு நாளை ஒதுக்கி, நாள் முழுவதும் மக்களைச் சந்திக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
விஜய்க்கு ஏற்கெனவே போதுமான மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, அவர் மக்களிடையே தனது பிரபலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
முதல்வரின் வருகையின்போது கோவையில் வீதிகளின் இருபுறங்களிலும் தடுப்புகளை அமைப்பது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேவையான அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் மேற்கொண்டு, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
மின்சாரக் கொள்முதல் தொடர்பில் கேள்வி
காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னணியில் உள்ள தமிழக அரசு, ஒரு அலகு மின்சாரத்தை 35 ரூபாய் கொடுத்து ஏன் கொள்முதல் செய்ய வேண்டும் என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இந்த விலைக்கான செலவை மக்களே ஏற்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மின்சார விவகாரத்தில் அடுத்த ஓராண்டுக்கான அரசின் திட்டம் மற்றும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஜெம் வீரமணி கைது தொடர்பில் வரவேற்பு
ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்த அண்ணாமலை, பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதை வரவேற்பதாகக் கூறினார். அவருக்கு எதிராக குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் வரவேற்றார்.
எல். முருகனின் முடிவு குறித்து கருத்து
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதவி விலகியுள்ளதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, அவருடன் தாம் தொலைபேசியில் பேசியதாகத் தெரிவித்தார்.
கொங்கு பகுதியைச் சேர்ந்த எல். முருகன் தமிழகத்திற்குப் பல்வேறு பணிகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவரது முடிவு எதுவாக இருந்தாலும் அது கட்சியின் முடிவுடனும் பிரதமரின் முடிவுடனும் தொடர்புடையது எனக் கூறினார்.
டெல்லியில் இளைஞர்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவது தவறல்ல என்றும், அதேவேளை இளைஞர்களின் கேள்விகளுக்குத் தனது தரப்பு நியாயத்தை அரசாங்கம் முன்வைப்பதும் தவறல்ல என்றும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், நீர் மேலாண்மையில் தமிழகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, இந்தத் துறையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த அவர், தனது பணிகளை முடித்த பின்னர் திரைப்படத்தைப் பார்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.