ஒக்டோபர் 27 வரை தொடரக்கூடும் கடும் மழை!
இலங்கையின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு
இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகத்தினர் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு அருகில் நிலவிய வளிமண்டலத் தளம்பல் தற்போது தாழமுக்கப் பிரதேசமாக வலுப்பெற்று, நாட்டின் வடமேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்தத் தாழமுக்கப் பிரதேசம் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இடைவிட்டு மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஒக்டோபர் 23ஆம் திகதி வரையிலும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களிலிருந்து வீசும் காற்றுகள் ஒன்றிணையும் வெப்பமண்டலக் காற்றுக் குவிப்பு வலயம் (Intertropical Convergence Zone) தற்போது இலங்கைக்கு அருகில் நிலைகொண்டுள்ளமையும் மழையுடனான வானிலை நீடிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஒக்டோபர் 23ஆம் திகதியளவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் மற்றுமொரு தாழமுக்கப் பிரதேசம் உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதி நேரடியாக இலங்கையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை. எனினும், அதனை நோக்கி இலங்கைக்கு மேலாகக் காற்று வீசுவதன் காரணமாக, குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை மழை நீடிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் வானிலை நிலவரங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பலநாள் மீன்பிடிப் படகுகளில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானித்து, அதற்கேற்ப செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.