ஏர்பேக் வெடிக்கும் அபாயம்: அமெரிக்காவில் 3.14 இலட்சத்துக்கும் அதிகமான டொயோட்டா, லெக்ஸஸ் வாகனங்கள் மீளப்பெறப்படுகின்றன!
ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota), ஏர்பேக்குகளில் காணப்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் 314,029 டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் (Lexus) வாகனங்களை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளது.
குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர்பேக்குகள் விபத்தின்போது வெடித்து, கூர்மையான உலோகத் துண்டுகளை வாகனத்திற்குள் சிதறடிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட சில வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள Takata நிறுவனத்தின் முன்பக்க பயணிகள் ஏர்பேக் உந்திகள் (Airbag Inflators) இந்த மீளப்பெறல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, பாதிக்கப்பட்டுள்ள வாகன வகைகள் வருமாறு:
- Toyota Corolla (2003–2008)
- Toyota Tundra (2005–2006)
- Toyota Sequoia (2005–2007)
- Toyota 4Runner (2016–2017)
- Lexus SC430 (2002–2010)
- Lexus IS250 (2011)
- Lexus GX460 (2017)
அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்திற்கு நீண்டகாலம் உட்படுவதால், ஏர்பேக் உந்திக்குள் காணப்படும் வெடிப்புப் பொருள் சிதைவடையக்கூடும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, விபத்தின்போது ஏர்பேக் செயல்படும் சந்தர்ப்பத்தில் அதன் உந்தி வெடித்து, கூர்மையான உலோகத் துண்டுகள் வாகனத்திற்குள் சிதறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்ட ஏர்பேக் உந்திகள் வெடித்ததாக இதுவரை எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த மீளப்பெறல் முன்னெடுக்கப்படுவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னைய பாதுகாப்பு மீளப்பெறல் நடவடிக்கைகளின்போது மாற்றப்பட்ட சில ஏர்பேக் உதிரிப்பாகங்களைக் கொண்ட வாகனங்களும் தற்போதைய நடவடிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட வாகனங்களின் ஏர்பேக் உந்திகள் அல்லது முழுமையான ஏர்பேக் தொகுதிகள் டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் விற்பனைக்குப் பிந்தைய சேவை மையங்களால் எவ்விதக் கட்டணமுமின்றி மாற்றிக்கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான அறிவித்தல் கடிதங்கள் 2026 டிசம்பர் 28ஆம் திகதி முதல் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
அமெரிக்காவில் உள்ள வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் அடையாள இலக்கமான VIN எண்ணைப் பயன்படுத்தி, டொயோட்டாவின் உத்தியோகபூர்வ மீளப்பெறல் இணையத்தளம் அல்லது NHTSA தரவுத்தளத்தின் ஊடாக தங்களது வாகனம் இந்தப் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
உலகளாவிய ரீதியில் பல கோடி வாகனங்களை மீளப்பெறுவதற்கு வழிவகுத்த நீண்டகால Takata ஏர்பேக் பாதுகாப்புப் பிரச்சினையின் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.