இலங்கையில் தினமும் 20 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர் – முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 20 பேர் புதிதாக போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தியோகபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், போதைப்பொருள் பாவனை நாட்டில் பாரிய தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், போதைப்பொருள் பாவனை தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பரவி வருவது பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் சுமார் இரண்டு இலட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி, நாளொன்றுக்கு சுமார் 20 பேர் புதிதாக போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர். அப்படியானால், ஒரு வருடத்தில் இந்த எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர், நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் போதைப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 6,000 ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இதனால், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பங்களும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்காக சிலர் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
போதைப்பொருள் பிரச்சினையானது குற்றச் செயல்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவித்த அவர், சுகாதார சேவைகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள், பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்காக அரசாங்கத்திற்கும் மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் போதைப்பொருட்களின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து செயற்படும் ஒரு சில நபர்களே கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேவேளை, நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பிரச்சினையை பொலிஸ் உள்ளிட்ட சட்ட அமுலாக்கல் பிரிவுகளால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது எனவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக அமைப்புகள், மனநல ஆலோசகர்கள் மற்றும் ஏனைய துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு அவசியம் என வலியுறுத்திய அவர், போதைப்பொருள் தடுப்பு மற்றும் அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் சமூகத்தின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பு: போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை மற்றும் நாளொன்றுக்கு புதிதாக அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்பில் அஜித் ரோஹண முன்வைத்துள்ள தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.