அயர்லாந்து விமான நிலையத்தில் 60 மில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ விமானத்தை சேதப்படுத்திய நபர்

arvloshan.com

அயர்லாந்தின் ஷனன் (Shannon) சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அமெரிக்க இராணுவ விமானத்தை கோடாரியால் தாக்கி முற்றாகச் சேதப்படுத்தியதாக 48 வயதுடைய நபர் ஒருவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

டெய்தி ஓ'கொரைன் (Daithi O’Corrain) என்ற நபருக்கு எதிராக, அமெரிக்க அரசாங்கச் சொத்துக்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, விமான நிலையத்தின் பாதுகாப்பு வேலியைத் தாண்டிச் சென்ற குறித்த நபர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் C-130 ஹெர்குலிஸ் (C-130 Hercules) ரக விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் ஹைட்ராலிக் குழாய்களை வெட்டியதுடன், விமானி அறையிலிருந்த அனைத்து அளவுமானிகளையும் உடைத்துச் சேதப்படுத்திய அவர், விமானத்தின் எரிபொருள் தாங்கிகளுக்குள் உலோக உருண்டைகளையும் செலுத்தியுள்ளார்.

மேலும், விமானத்தின் பல்வேறு முக்கிய உதிரிப்பாகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளையும் செயலிழக்கச் செய்துள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த விமானம் மீண்டும் பறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் முக்கிய இராணுவ நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டதாகவும் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான FBI தெரிவித்துள்ளது.

குறித்த நபர் பல மாதங்களாக இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. விமானத்தின் கட்டமைப்பு தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடியதுடன், விமான நிலையத்திற்குள் இரகசியமாக நுழைவதற்கான வழிகள் மற்றும் இராணுவ விமானங்களின் பயணங்களைக் கண்காணிக்கும் செயலி தொடர்பான தகவல்களையும் அவர் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அலுமினியம் மற்றும் இரும்புப் பொருட்களை அரிக்கும் தன்மையுடைய கலியம் (Gallium) என்ற இரசாயனப் பொருளையும் அவர் கொள்வனவு செய்திருந்ததாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அதிகாலை சுமார் 4.40 மணியளவில் விமான நிலையத்திற்குள் நுழைந்த அவர், விமானத்தின் பின்புறக் கதவின் பூட்டும் பொறிமுறையைச் சேதப்படுத்தி உள்ளே சென்றுள்ளார். பின்னர் விமானத்தின் கதவுகளைத் திறக்க முடியாத வகையில் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தித் தடுத்ததுடன், பல மணிநேரங்களாக விமானத்தின் முக்கிய பாகங்களைச் சேதப்படுத்தியுள்ளார்.

காலை சுமார் 9.40 மணியளவில் விமானத்தின் பணியாளர்கள் மீண்டும் அங்கு வந்தபோது, விமானி அறை வழியாக அவரைக் கண்டுள்ளனர். இதையடுத்து பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டதுடன், விமானத்தின் கூரையிலிருந்து கோடாரியுடன் வெளிவந்த அவர், விமானத்தின் வெளிப்புறத்தையும் தாக்கியதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான இராணுவத் தலையீடுகளுக்கும், காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு வழங்கப்படும் ஆதரவுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தச் செயலில் ஈடுபட்டதாக ஓ'கொரைனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரை ஒரு சுயாதீனமான சமாதானச் செயற்பாட்டாளராக வர்ணித்துள்ள ஆதரவாளர்கள், அமெரிக்க இராணுவத்தின் அயர்லாந்து பிரசன்னத்திற்கு எதிரான நேரடி எதிர்ப்புச் செயலாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க இராணுவச் சொத்துக்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான தாக்குதல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என மன்ஹாட்டன் அமெரிக்க வழக்கறிஞர் ஜேமி மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்க அதிகாரிகளின் காவலில் இல்லாத ஓ'கொரைன், அயர்லாந்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு சட்டத்தின் கீழ் குற்றவியல் சேதம் ஏற்படுத்தியமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்க இராணுவத்தினருக்கும் இராணுவ உபகரணங்களுக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் ஷனன் விமான நிலையத்தில் கடந்த 18 மாதங்களில் பல பாதுகாப்பு மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

பாதுகாப்பு அச்சுறுத்தல்: சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நவம்பர் 30 வரை இடைநிறுத்தியுள்ள முன்னணி விமான நிறுவனங்கள்

...

arvoshan.com

அமெரிக்காவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் விசாரணை!

...

arvoshan.com

ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் – தடயவியல் நிபுணர்கள் புதிய தகவல்

...

arvoshan.com

ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார் டொனால்ட் ட்ரம்ப் – பிலிப்பைன்ஸில் பொருளாதார ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் திடீர் சேவைத் தடை – ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு!

...

arvoshan.com

திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை – கனடா அறிவிப்பு!

...

arvoshan.com

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!

...

arvoshan.com

மத்திய கிழக்கிற்கு வந்தடைந்தது அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்

...

arvoshan.com

இரண்டு நாட்களில் 2,200க்கும் மேற்பட்ட குடியேறிகள் கேனரி தீவுகளை வந்தடைந்தனர்!

...

arvoshan.com

நைஜீரியாவில் 33.95 கிலோ கஞ்சாவுடன் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கைது!

...

arvoshan.com

சீனப் போட்டியால் நெருக்கடியில் ஜாகுவார்; 4,000 வேலைவாய்ப்புகள் குறைப்பு!

...

arvoshan.com

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி – விநியோகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

...

arvoshan.com

டிக்டொக் காணொளி படப்பிடிப்பின்போது வனவிலங்கு தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு – பாகிஸ்தானில் இருவர் கைது

...

arvoshan.com

அமெரிக்காவில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் படகு – 30க்கும் மேற்பட்டோர் காயம்!

...

arvoshan.com

அமெரிக்க வான்பரப்பில் நான்கு மணி நேரப் பெரும் குழப்பம் – என்ன நடந்தது?

...