அமெரிக்காவில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் படகு – 30க்கும் மேற்பட்டோர் காயம்!
அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் துறைமுகத்திற்கு அருகே மிசிசிப்பி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் படகுடன் எண்ணெய் தாங்கிக் கப்பல் மோதியதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (நவம்பர் 13) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
சுமார் 200 பயணிகளுடன் பயணிகள் கப்பலான *American Heritage* ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த *Atlantic Asphalt* என்ற தாங்கிக் கப்பல் அதன் மீது மோதியுள்ளது. இதனால் பயணிகள் கப்பல் நிலைகுலைந்து பின்னர் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
சம்பவத்தையடுத்து உடனடியாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நியூ ஓர்லியன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 30 பயணிகளும், மீட்புப் பணியின்போது ஆற்றில் இறங்கிய இரண்டு அதிகாரிகளும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களுக்குப் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சிறுவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நியூ ஓர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரேனோ, கப்பல் மோதியதைத் தொடர்ந்து பயணிகள் வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
எனினும், சிறிது நேரத்திலேயே *American Heritage* கப்பல் நீரில் மூழ்கத் தொடங்கி, இறுதியில் கவிழ்ந்துள்ளது. இதனால் கப்பலில் எஞ்சியிருந்த சிலர் ஆற்றில் விழுந்ததாகவும், உடனடியாக அவசரகால மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சுமார் 200 பேர் பயணித்த கப்பலில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டமை ஒரு அதிசயம் என மேயர் ஹெலினா மொரேனோ இதனை **“மிசிசிப்பியில் நிகழ்ந்த அதிசயம்”** என வர்ணித்துள்ளார்.