அமெரிக்க வான்பரப்பில் நான்கு மணி நேரப் பெரும் குழப்பம் – என்ன நடந்தது?
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தொடர்பாடல் கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து சுமார் நான்கு மணி நேரம் முடக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இந்தத் திடீர் முடக்கத்தினால் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதுடன், பெருமளவிலான விமானங்கள் தாமதமடைந்தும் இரத்துச் செய்யப்பட்டும், சில விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டும் உள்ளன.
பாதிக்கப்பட்ட தொடர்பாடல் கட்டமைப்புகளைத் தொழில்நுட்பக் குழுவினர் பரிசோதித்து, விமானப் போக்குவரத்தை மீண்டும் பாதுகாப்பாக முன்னெடுக்க முடியும் என உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) நாடு தழுவிய விமானத் தடை உத்தரவை நீக்கியது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட விமானக் கண்காணிப்புத் தரவுகளின்படி, இந்தத் தடங்கலின் போது 10,000-க்கும் அதிகமான விமானங்கள் தாமதமடைந்துள்ளதுடன், 1,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு மையங்களைப் பாதித்த தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பே இந்த நெருக்கடிக்குக் காரணம் என FAA தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நாடு தழுவிய விமானப் புறப்பாட்டுத் தடை அமுல்படுத்தப்பட்டதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கப் போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி (Sean Duffy) கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு அமெரிக்காவின் பழமையான விமானப் போக்குவரத்துக் கட்டமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, காலாவதியான தொடர்பாடல் உபகரணங்கள் அதிக சுமையை எதிர்கொண்டமை இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வெய்ன் முலின் (Markwayne Mullin), இந்தச் சம்பவம் இணையவழித் தாக்குதல் அல்லது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வேறு ஏதேனும் நாசகாரச் செயலால் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய நாடு தழுவிய இடையூறுகளில் ஒன்றாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
இதற்கு முன்னரும் 2023 ஜனவரி மாதம், FAA-வின் விமானிகளுக்கான அறிவித்தல் கட்டமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமானப் புறப்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், விமானங்கள் மற்றும் பணியாளர்களை உரிய இடங்களுக்கு மீளமைத்தல், வழக்கமான விமான அட்டவணைகளைச் சீரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக மேலும் சில தாமதங்களும் விமான இரத்துகளும் ஏற்படக்கூடும் என விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இந்தச் சம்பவம், அமெரிக்காவின் பழமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. அத்துடன், விமானப் போக்குவரத்துத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான பாரிய மேம்படுத்தல்களின் அவசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.