அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையப் பாதுகாப்புத் தலைவர் மாற்றம்!
அமெரிக்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட தொடர் தொழில்நுட்பச் சேவைத் தடங்கல்களைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் தேசிய இணையப் பாதுகாப்புப் பணிப்பாளர் பதவியிலிருந்து சீன் கெயின்கிராஸ் (Sean Cairncross) விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக, அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் (பென்டகன்) தலைமைத் தகவல் அதிகாரியாகப் பணியாற்றும் கிற்ஸ்டன் டேவிஸ் (Kirsten Davies) புதிய தேசிய இணையப் பாதுகாப்புப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெள்ளிக்கிழமை இந்த நியமனத்தை அறிவித்ததுடன், கிற்ஸ்டன் டேவிஸுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அவர் தற்காலிக அடிப்படையில் இப்பதவியைப் பொறுப்பேற்பார் என வெள்ளை மாளிகை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சேவைத் தடங்கல்களால் விமானப் போக்குவரத்து, வங்கிச் சேவைகள், தகவல் தொடர்பு, இணையவழி வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் (NSA) வலையமைப்புகளும் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், அவை இணையவழித் தாக்குதல்களால் ஏற்பட்டவை என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதிய பதவியை ஏற்கவுள்ள கிற்ஸ்டன் டேவிஸ், அமெரிக்காவின் எதிர்கால வாழ்க்கை முறையானது டிஜிட்டல் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களுடன் அதிகளவில் தொடர்புபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத் தலைமுறைகளுக்காக இணையவெளியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு, நாட்டின் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை நவீனமயப்படுத்துவதுடன், அவற்றின் பாதுகாப்பு மற்றும் மீண்டெழும் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2025ஆம் ஆண்டு சீன் கெயின்கிராஸை நாட்டின் இணையப் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான பிரதான ஆலோசகராகப் பரிந்துரைத்திருந்தார். பின்னர் செனட் சபையின் ஒப்புதலுடன் அவர் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றார்.
ட்ரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருந்த கெயின்கிராஸ், குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவிலும் நிர்வாகியாகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.