விமல், கம்மன்பில, திலீத் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலீத் ஜயவீர உள்ளிட்ட அறுவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய, நீதியரசர்களான சமத் மொரைஸ் மற்றும் ஆதித்ய பட்டபெண்டிகே ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு வந்தது.
இதன்போது, பெயரிடப்பட்ட தரப்பின சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் கோரப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
குறித்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான முன்னேற்றங்களை பரிசீலிப்பதற்காக, வழக்கு விசாரணையை அக்டோபர் 15 ஆம் திகதி காலைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெயரிடப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக, இவ்வழக்கு அக்டோபர் 23 ஆம் திகதி பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.