சவூதி மரண தண்டனை வழக்கு: அனோஜன் தாக்கப்பட்டமை குறித்து அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவிற்கு சட்ட உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சட்டக் குழுவொன்று தற்போது சவூதி அரேபியாவில் ஆயத்தமாகி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஒக்டோபர் 17 ஆம் திகதியாகும் எனத் தெரிவித்த அமைச்சர், சவூதி சட்ட நிறுவனமொன்றுடன் கலந்தாலோசித்த பின்னர், குறித்த சட்டக் குழு விரைவில் மனுவை நிறைவு செய்து தாக்கல் செய்யும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையின் சட்ட வல்லுநர்களும் சவூதியின் சட்ட ஆலோசகர்களும் இணைந்து இந்த மேல்முறையீட்டுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை, வெளியுறவு அமைச்சு, ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை ஒருங்கிணைந்து அனோஜனுக்கு தேவையான சட்ட மற்றும் விசா/தூதரக உதவிகளை வழங்கி வருகின்றன.
நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னரே, தண்டனையைக் குறைப்பது அல்லது மன்னிப்பு வழங்குவது தொடர்பான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.
வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை எந்தவொரு தலையீட்டிற்கும் ஆதரவளிக்க முடியாது என சவூதி அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளின் போது சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மன்னிப்பு கோரும் இராஜதந்திர தலையீடுகள் நீதித்துறை செயல்முறைகள் முடிவடைந்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதனிடையே, சிறையில் அனோஜன் அண்மையில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஒக்டோபர் 6 ஆம் திகதி சிறைச்சாலைக்குச் சென்று, சிறைச்சாலையின் தலைமை அதிகாரி மற்றும் சிறை மருத்துவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
சவூதி சிறை அதிகாரிகளால் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி, அனோஜனுக்கும் அவருடன் ஒரே சிறை அறையைப் பகிர்ந்து கொண்ட மற்றொரு கைதிக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம், கைக்கலப்பாக மாறியுள்ளது.
இந்த மோதலில் அனோஜனின் முகத்தில் நகக்கீறல்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கத்தி அல்லது எந்தவொரு கூர்மையான ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றும் சிறை அதிகாரிகளும் மருத்துவரும் இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளதாக விஜித ஹேரத் கூறினார்.
இருப்பினும், இந்த விஜயத்தின் போது இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அனோஜனை நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதையும், அவருடைய காயங்கள் தொடர்பான தகவல்கள் சவூதி அதிகாரிகளினாலேயே வழங்கப்பட்டதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
தற்போது அனோஜனின் உயிருக்கு அடையாளம் காணப்பட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், அவருடைய பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்றும் சிறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளனர். அத்துடன் அவர் வேறு சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அனோஜன் மிகவும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அமைச்சர், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், அனோஜனுக்காக சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், சவூதி அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் தகவல்களையே இலங்கை நம்பியிருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
சவூதி அரேபியாவின் சட்ட மற்றும் நீதித்துறை கட்டமைப்பிற்குள் இருந்து அனோஜனுக்கு நிவாரணம் பெற்றுத்தர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.