ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்கள் கடும் கவலை!
வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர், அவரது துறவறக் காவி உடைகளுக்குப் பதிலாக சாதாரண உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறித்து இலங்கையின் முதன்மை பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தமது தீவிர கவலை தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மகாநாயக்க தேரர்கள் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை செயற்பாடுகளைத் தாங்கள் முழுமையாக மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், பௌத்த துறவி ஒருவரின் காவி உடை அகற்றப்படுவதையோ அல்லது அவரது துறவற நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதையோ சிறைச்சாலை விதிமுறைகளுக்குட்பட்ட வெறும் நிர்வாக ரீதியான விடயமாகக் கருத முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான விடயங்கள் மகா சங்கத்தின் சமய அதிகாரத்திற்குட்பட்டவை எனத் தெரிவித்துள்ள மகாநாயக்க தேரர்கள், பௌத்த துறவி ஒருவரின் துறவற நிலை தொடர்பான தீர்மானங்களைெடுக்கும் அதிகாரம் அதற்குரிய நிகாய அல்லது சங்க சபளுக்கே (Sangha Sabha) உரியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஞானசார தேரர் துறவற நிலையை இழக்கக்கூடிய பாராஜிக குற்றத்தைச் செய்துள்ளார் என்றோ அல்லது அவரது காவி உடை களையப்பட வேண்டும் என்றோ சம்பந்தப்பட்ட சங்க சபை இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலை நிலையான கட்டளைகளின் 550ஆவது விதியைக் மேற்கோள் காட்டியுள்ள மகாநாயக்க தேரர்கள், தண்டனை பெற்ற கைதிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்போது, அவர்கள் தண்டனைக்கு முன்னர் அணிந்து பழகிய உடைகளையே அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டுள்ளனர். பௌத்த துறவி ஒருவரைப் பொறுத்தவரை, தண்டனைக்கு முன்னர் அவர் அணிந்திருந்த உடை என்பது அவரது காவி உடைகளேயன்றி சாதாரண பொதுமக்களின் உடைகள் அல்ல என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அத்துடன், கைதிகளை நடாத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் தரநிலை குறைந்தபட்ச விதிகளின் 17(3) விதியையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் கைதிகள் தங்களது சொந்த உடைகளையோ அல்லது ஏனைய கண்ணியமான உடைகளையோ அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, ஞானசார தேரர் எதிர்கால நீதிமன்ற விசாரணைகளின் போது தொடர்ந்து காவி உடையில் முன்னிலையாவதற்குத் தேவையான நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், அவர் சிறையில் இருக்கும் காலத்தில் அவரது துறவற நிலைக்குப் பாதகம் ஏற்படாதிருப்பதை உறுதி செய்யுமாறும் மகாநாயக்க தேரர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர், அண்மையில் சாதாரண உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்தச் சர்ச்சை உருவானது.
எனினும், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துவருகிறது. கடின உழைப்புடன்கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த துறவிகள் சிறைச்சாலையால் வழங்கப்படும் உடைகளையே அணிய வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட தண்டனைக் காலத்தைக் கொண்ட கைதிகள் திணைக்களத்தால் வழங்கப்படும் உடைகளிலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.