2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 211,666 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பயணம்
நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்தம் 211,666 இலங்கைத் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
இவ்வாறு வெளிநாடு சென்றவர்களில் 141,916 பேர் சொந்த ஏற்பாடுகளின் மூலமும், 69,750 பேர் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் மூலமும் தொழில்களுக்காகப் பயணித்துள்ளனர்.
இவர்களில் 134,761 ஆண்களும் 76,905 பெண்களும் அடங்குவதோடு, 108,343 பேர் திறன்சார் வல்லுநர்களாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மாதங்களில், கடந்த செப்டம்பர் மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலானோர் வெளிநாடு சென்றுள்ளனர். இம்மாதத்தில் மட்டும் 29,752 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நோக்கிப் பயணித்துள்ளனர்.
அத்துடன், 2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கை வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் மூலம் 6,131 மில்லியன் அமெரிக்க டொலர்களை (USD) வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.