கட்டாய SLS தரச்சான்று இன்றி மின் உபகரணங்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
கட்டாயக் கடமையாக்கப்பட்ட இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) தரச்சான்றளிக்கும் முத்திரை இன்றி மின்சார உபகரணங்களை விற்பனைக்கு வைத்திருந்த கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள இரு வர்த்தக நிலையங்களுக்கு தலா 1,00,000 ரூபாய் வீதம் மொத்தம் 2,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் (CAA) தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இரு நிறுவனங்களும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதில் ஒரு வர்த்தக நிலையம், கட்டாய SLS தரமுத்திரை இல்லாத 98 'ஏசி/டிசி 12 வோல்ட் அடாப்டர்களை' (AC/DC 12V Adapters) விற்பனைக்கு வைத்திருந்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளது. மற்றைய நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கட்டாய SLS தரமுறைகளுக்கு அமைவாக இல்லாத 200-க்கும் மேற்பட்ட பன்முக எல்.ஈ.டி (LED) விளக்கு பொதிகளை விற்பனை செய்ய முயன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, 2019 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்த 63 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் கீழ், 250 வோல்ட்டுக்கு மிகையல்லாத குறிப்பிட்ட மின்சார சாதனங்கள் மற்றும் உபகரணங்கள், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பொருத்தமான SLS தரமுத்திரையைக் கொண்டிருக்காவிட்டால் அவற்றை தயாரிப்பதோ, இறக்குமதி செய்வதோ, விநியோகிப்பதோ, களஞ்சியப்படுத்துவதோ அல்லது விற்பனைக்கு வைப்பதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த விதிமுறை அனைத்து மின்சாரப் பொருட்களுக்கும் பொருந்தாது என்றும் குறிப்பிட்ட சில மின்சார சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி செருகிகள் (Plugs), சாக்கெட்டுகள் (Socket Outlets), நீட்டிப்பு வடங்கள் (Extension Cords), அடாப்டர்கள் (Adapters) மற்றும் கேபிள் ரீல்கள் (Cable Reels) போன்ற குறிப்பிட்ட மின் உபகரணங்களுக்கு இந்த SLS சான்று கட்டாயமாகும்.
பொதுமக்கள் இத்தகைய மின் உபகரணங்களைக் கொள்முதல் செய்யும்போது தகுந்த SLS தரமுத்திரை இருப்பதை உறுதிசெய்து கொள்வதோடு, முறையான பற்றாசீயையும் (Receipt) பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்டாயத் தரமுறைகளைப் பின்பற்றத் தவறும் மின் உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.