ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘டோரதி’ தேர்வு
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 56ஆவது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்குத் தேர்வாகியுள்ளது.
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடைபெறவுள்ள இத்திரைப்பட விழாவின் ‘லைம்லைட்’ (Limelight) பிரிவில் ‘டோரதி’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மதிப்புமிக்க ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் லைம்லைட் பிரிவில் தனது திரைப்படம் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இளையராஜா இசையமைப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இப்படம், பின்னர் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
1990களின் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், பாலின மாற்றம் மற்றும் அதனைச் சார்ந்த சமூகப் பார்வைகள் குறித்து பேசியிருந்தது. வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்களையும் பாராட்டுகளையும் பெற்றது.
இதற்கு முன்னதாக, திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் ‘டோரதி’ திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், தற்போது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் தேர்வாகியுள்ளமை, இப்படத்திற்குக் கிடைத்துள்ள மற்றுமொரு சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.