பிரேசில் ஜனாதிபதியாக லூலா நான்காவது முறையாகத் தெரிவு!
பிரேசிலின் இடதுசாரித் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 25) நடைபெற்ற இரண்டாம் சுற்றுத் தேர்தலில், வலதுசாரி செனட்டரான ஃபிளாவியோ போல்சொனாரோவைத் தோற்கடித்து லூலா வெற்றிபெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசிலின் தேர்தல் அதிகார சபையின் தகவல்களின்படி, லூலா 51.8 சதவீத வாக்குகளையும், ஃபிளாவியோ போல்சொனாரோ 48.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
80 வயதான லூலா, முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோவின் மூத்த மகனான ஃபிளாவியோ போல்சொனாரோவைத் தோற்கடித்துள்ளார். இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஜெய்ர் போல்சொனாரோவைத் தோற்கடித்து லூலா ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், பிரேசில் தேர்தல் வரலாற்றில் முதல் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பெற்ற வேட்பாளர் ஒருவர், இரண்டாம் சுற்றில் வெற்றிபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லூலா இதற்கு முன்னர் 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பிரேசிலின் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார். பின்னர் 2023 ஜனவரியில் மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இந்நிலையில், சில வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கும் நேரத்தை மேலும் இரண்டு மணித்தியாலங்களுக்கு நீடிக்க பிரேசில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியமை தேர்தலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் தடைகள் மற்றும் மோசமான காலநிலை காரணமாக வாக்காளர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தேர்தலில் தோல்வியடைந்த ஃபிளாவியோ போல்சொனாரோ, தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளதுடன், வாக்களிக்கும் நேரத்தை நீடித்த தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தி தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், லூலா தனது நான்காவது ஜனாதிபதிப் பதவிக்காலத்தை 2027 ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.