விநியோக அச்சங்களுக்கு மத்தியிலும் கச்சா எண்ணெய் விலை சரிவு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடந்த வார இறுதியில் ஆறு மாதங்களில் பதிவான அதிகபட்ச நிலைகளை அண்மித்திருந்த நிலையில், திங்கட்கிழமை (26) சரிவடைந்துள்ளன. எனினும், சவூதி அரேபியா மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக எரிசக்தி விநியோகம் தொடர்பான அச்சங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன.
சர்வதேச நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 00.18 மணியளவில், அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.60 அமெரிக்க டொலர் அல்லது 1.55 சதவீதம் சரிவடைந்து 101.67 டொலராகப் பதிவானது.
அதேவேளை, சர்வதேச சந்தையில் முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.56 டொலர் அல்லது 1.34 சதவீதம் குறைந்து 115.16 டொலராகப் பதிவானது.
சவூதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலைகள் சுமார் 3 டொலர் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தன.
கடந்த வாரம் முழுவதும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதமும், WTI கச்சா எண்ணெய் விலை 2.3 சதவீதமும் அதிகரித்திருந்தன.
இந்நிலையில், வார இறுதியிலும் சவூதி அரேபியா மீதான தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. சனிக்கிழமை அந்நாட்டின் விமான நிலையம் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட மேலும் பல தாக்குதல்களைத் தமது பாதுகாப்புப் படைகள் இடைமறித்துள்ளதாக சவூதி அரேபியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
முன்னதாக இடம்பெற்ற ஹூதி தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் பிரதான விமான நிலையம் பகுதியளவில் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த விமான நிலையத்தைத் தொடர்ந்து இலக்கு வைப்பதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியா உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருப்பதால், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச எரிசக்திச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.