பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்கப் போவதில்லை – உற்பத்தியாளர்கள் உறுதி
பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்கப் போவதில்லை என முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் உறுதியளித்துள்ளன.
அத்துடன், பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்களும் வர்த்தக சங்கங்களும் தெரிவித்துள்ளன. மேலும், சந்தையில் கோழி இறைச்சியின் விலை ஏற்கனவே குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சியைத் தட்டுப்பாடின்றி வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல், நவம்பர் 23ஆம் திகதி வர்த்தக அமைச்சில் நடைபெற்றது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், முட்டை மற்றும் கோழி இறைச்சி வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், சிறிய மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சந்தையில் கோழி இறைச்சியின் விலை குறைந்து வருகின்ற போதிலும், முட்டையின் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பண்டிகைக் காலத்தில் விலை அதிகரிப்பின்றி பொதுமக்களுக்கு முட்டைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, தற்போதைய முட்டை விலையைத் தொடர்ந்து பேணுவதற்கு உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. அதேவேளை, கோழி இறைச்சியைத் தட்டுப்பாடின்றி விநியோகிப்பதாக உற்பத்தியாளர்களும் வர்த்தக சங்கங்களும் உறுதியளித்துள்ளன.
மறுபுறம், கால்நடைத் தீவனத்திற்கான மூலப்பொருட்கள் தொடர்பான சவால்கள், தீவனத்தின் தரம் மற்றும் போதிய விஞ்ஞான அறிவின்மை ஆகிய காரணங்களால் சிறிய அளவிலான பண்ணையாளர்கள் தீவனக் கலவையைச் சரியான முறையில் தயாரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இதனால் முட்டை உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கால்நடைத் தீவனத்தின் தரம் மற்றும் உரிய தரநிலைகளைப் பேணுவதற்கும், தீவன உற்பத்தியாளர்களைப் பதிவு செய்வதற்கும், உற்பத்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தத் தகவல்களை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு நவம்பர் 23ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.