2027 வரவு செலவுத் திட்டத்தில் ரூ.2 டிரில்லியன் மூலதனச் செலவினம்!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2 டிரில்லியன் நிதி, இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன், முதலீடுகளை அதிகரித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்வதேச சான்றளிக்கப்பட்ட தொழில்முறை கணக்காளர்கள் சங்கம் (AICPA) மற்றும் இலங்கையின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம் (CIMA) ஆகியன இணைந்து அண்மையில் (19) ஏற்பாடு செய்திருந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
'2027 வரவு செலவுத் திட்டமும் அதற்கு அப்பாலும்: வணிகம் மற்றும் வளர்ச்சியின் எதிர்காலத்தை வழிநடத்துதல்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாட்டின் பொருளாதார எதிர்காலம் மற்றும் வர்த்தகத் துறைக்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2 டிரில்லியன் நிதி, பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், வர்த்தக நிறுவனங்களின் இலாபத்தன்மையை மேம்படுத்தவும், வணிக விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தவும் உதவும் என திறைசேரி செயலாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு (SMEs) ஆதரவளிக்கும் வகையில் 2027ஆம் ஆண்டுக்காக ரூ.174 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிதியின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் தமது உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றுக்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வர்த்தக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றார்.
அரசாங்கத்தின் பொதுமுதலீட்டுத் திட்டங்கள் தற்போது மிகவும் முறையான நடைமுறையின் கீழ் தெரிவு செய்யப்படுவதாகவும், திட்டங்களின் தயார்நிலை, சாத்தியக்கூறுகள், பொருளாதாரத் தாக்கம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அவை வழங்கும் பங்களிப்பு ஆகியன இதன்போது கருத்திற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், வரி வீதங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதன் மூலம் வரி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வருமானச் சேகரிப்பு நடைமுறைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள் மூலம் வினைத்திறனை அதிகரிக்க முடியும் என்பதுடன், முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரையும் படிப்படியாக முறைசார் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் கொண்டுவர முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிப்புறப் பொருளாதார அதிர்வுகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கையின் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தவும், நிதி ஸ்திரத்தன்மையைப் பேணவும் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் திறைசேரி செயலாளர் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் குழும நிதிப் பணிப்பாளர் கிஹான் கூரே, அட்வகாட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ மற்றும் KPMG ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வரி மற்றும் ஒழுங்குமுறைப் பிரிவின் பிரதம அதிகாரி சுரேஷ் ஆர்.ஐ. பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.