2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் வீதி விபத்துகளில் 2,463 பேர் உயிரிழப்பு – பொலிஸார்
இலங்கையில் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை இடம்பெற்ற 2,330 மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்துகளில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக நவம்பர் 23ஆம் திகதி இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், குறித்த காலப்பகுதியில் 5,868 பாரிய விபத்துகளும், 9,870 சிறிய விபத்துகளும், 4,488 சொத்துச் சேதங்களை மாத்திரம் ஏற்படுத்திய விபத்துகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துகளில் படுகாயமடைந்தவர்களில் சுமார் 50 பேர் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துகளில் உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதசாரிகளாவர். இதன்படி, 813 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, 55 முதல் 85 வயதுக்கு இடைப்பட்ட வயதினரிடையே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அதேவேளை, மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 876 சாரதிகளும், 168 பின்னிருக்கை பயணிகளும் உயிரிழந்துள்ளனர். மேலும், 165 சைக்கிள் ஓட்டுநர்கள், 190 வாகனச் சாரதிகள் மற்றும் 240 பயணிகளும் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்துகளின் எண்ணிக்கை 11ஆல் அதிகரித்துள்ளதாகவும், எனினும் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16ஆல் குறைந்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரால் ஒன்பது மாகாணங்களிலும், 48 பொலிஸ் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்ட மூலோபாய செயற்திட்டமே உயிரிழப்புகளைக் குறைக்க உதவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்டின் இறுதிக்குள் வீதி விபத்துகளின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, பொலிஸ் நிலையங்கள், பிராந்தியப் பிரிவுகள் மற்றும் மாகாண மட்டங்களில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.