ஒக்டோபரில் இலங்கையின் பணவீக்கம் 8.5 சதவீதமாக அதிகரிப்பு
இலங்கையின் வருடாந்த பணவீக்க வீதம் 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், செப்டெம்பர் மாதத்தில் 8.1 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம் ஒக்டோபரில் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் உணவல்லாத பொருட்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் வருடாந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதன்படி, உணவுப் பொருட்களுக்கான வருடாந்த பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 6.9 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், ஒக்டோபரில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, உணவல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 9.1 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒக்டோபர் மாத பணவீக்க அதிகரிப்பில் உணவல்லாத பொருட்களே அதிக பங்களிப்பை வழங்கியுள்ளன. இதன்படி, உணவல்லாத பொருட்கள் 5.29 சதவீத பங்களிப்பையும், உணவுப் பொருட்கள் 3.21 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளன.
உணவல்லாத பொருட்கள் பிரிவில் போக்குவரத்துச் செலவுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பெற்றோல் விலை அதிகரிப்பு 1.21 சதவீதமும், பேருந்துக் கட்டணங்கள் 0.36 சதவீதமும், டீசல் விலை 0.20 சதவீதமும், பாடசாலை மற்றும் முன்பள்ளிப் போக்குவரத்துச் செலவுகள் 0.19 சதவீதமும் பணவீக்கத்துக்குப் பங்களித்துள்ளன.
மேலும், வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் பிரிவில் 1.17 சதவீத பங்களிப்பு பதிவாகியுள்ளது. இதில் வீட்டு வாடகை, வீடுகளைப் பராமரிப்பதற்கான பொருட்கள் மற்றும் திரவப் பெற்றோலிய எரிவாயு (LP Gas) ஆகியவற்றின் விலை அதிகரிப்பு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவுப் பொருட்கள் பிரிவில் மரக்கறிகள், புதிய மீன், கருவாடு, பெரிய வெங்காயம், பால்மா மற்றும் புதிய பழங்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதேவேளை, தேங்காய், அரிசி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட வருடாந்த வீழ்ச்சி உணவுப் பணவீக்க அதிகரிப்பைக் கட்டுப்படுத்த ஓரளவு உதவியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.