இந்தியாவின் சீரற்ற காலநிலையால் சில இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் – அமைச்சர் எச்சரிக்கை
இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாக, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, மாற்றுச் சந்தைகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து ஆராய இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைத் தடுப்பது தொடர்பாக அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் உலர்ந்த மிளகாய் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் உள்நாட்டுச் சந்தைக்கு தடையின்றி விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உலர்ந்த மிளகாயின் ஈரப்பதம் அதிகரித்துள்ளமையே தற்போது நிலவும் பிரதான பிரச்சினை எனவும் அவர் விளக்கியுள்ளார்.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) தரநிலைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இறக்குமதி செய்யப்படும் உலர்ந்த மிளகாயின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே அவற்றை உள்நாட்டுச் சந்தைக்கு விடுவிக்க முடியும்.
எனினும், இந்தியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, சில இறக்குமதித் தொகுதிகளில் ஈரப்பதம் 13 முதல் 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் குறித்த கொள்கலன்களைச் சுங்க அனுமதியுடன் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது உலர்ந்த மிளகாய்க்கான தட்டுப்பாட்டைக் குறிக்கவில்லை என்றும், நடைமுறையில் உள்ள தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கையிருப்புகளைச் சந்தைக்கு விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் எதிர்கால இறக்குமதிகளைப் பாதிக்கக்கூடும் என்பதால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இடைக்கால ஏற்பாடொன்றை நடைமுறைப்படுத்துமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், விநியோகத்தில் ஏற்படும் தடைகளைப் பயன்படுத்தி நியாயமற்ற வகையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்க முயற்சிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
சந்தையின் கேள்வி மற்றும் விநியோக நிலைமைகளுக்கு ஏற்ப விலைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், தேவையற்ற விலைக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், நுகர்வோரைப் பாதிக்கும் வகையில் வர்த்தகர்கள் செயற்பட்டால், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் நுகர்வோர் சேவைகள் சபை ஊடாக அரசாங்கம் தலையிடும் எனவும், தேவையேற்பட்டால் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.