பசில் ராஜபக்சவிற்கு எதிராக இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக இன்டர்போல் (INTERPOL) சிவப்பு எச்சரிக்கை பெறுவதற்கான அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்திற்கு சொந்தமான நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்டர்போல் (INTERPOL) ஊடாகச் சிவப்பு எச்சரிக்கையைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை எளிதாக்கும் வகையில், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் பிடியாணை ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
நடந்துவரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பணியகத்தின் விளம்பர நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட வேண்டிய 7.8 மில்லியன் ரூபாய் நிதியானது, கடந்த 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 ரி-சேர்ட்களை (T-shirts) வழங்குவதற்காகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுடனேயே இ வழக்குத் தொடர்புடையதாகும்.
இந்த நிதித் துஷ்பிரயோகம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னர் நீதிமன்றத்திற்கு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.