தீபாவளிக்காக ஆறு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை: ஏனைய மாகாண அறிவிப்புகளுக்குப் பின்னரே வடக்கிலும் அறிவிப்பு!
தீபாவளிக்காக ஆறு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை: ஏனைய மாகாண அறிவிப்புகளுக்குப் பின்னரே வடக்கிலும் அறிவிப்பு!
நாளை கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய ஆறு மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கு ஈடாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கும், இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்களை அந்தந்த மாகாண ஆளுநர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவின் ஊடகப் பிரிவு இன்று சனிக்கிழமை (7) அறிவித்தது. எனினும், அங்குள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் திங்கட்கிழமை வழமைபோன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த ஏனைய ஐந்து மாகாணங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்ட பின்னரே, வடக்கு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாக ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கிலும் இதற்குப் பதிலாக நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும்.
அதேவேளை, வடக்கு மாகாண சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் நவம்பர் 9ஆம் திகதி வழமைபோன்று இயங்கும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.