நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைக் கோரிய கம்பஹா நீதவான் உடனடியாக இடமாற்றம்!
இலங்கைப் பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு முன்னதாகக் கோரிக்கை விடுத்த கம்பஹா நீதவான் பண்டுல குணரத்ன, உடனடியாக நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றத்திற்கான கடிதத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் (JSC) செயலாளர் பிரசன்ன அல்விஸ் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக ஆதாரமற்ற சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், குறித்த நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி, பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரிடம் நீதவான் பண்டுல குணரத்ன கோரிக்கை விடுத்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமை நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் பாதிக்கும் செயல் என நீதவான் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கிடையில், குறித்த நீதவானுக்கு எதிராகப் பொலிஸ் மா அதிபர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து, அந்த முறைப்பாடு தொடர்பில் தனது விளக்கத்தைச் சமர்ப்பிக்குமாறு நீதவானிடம் ஆணைக்குழு கோரியிருந்தது.
இடமாற்றம் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, நீதவான் தனது விளக்கத்தை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், நீதவானின் இந்த இடமாற்றத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.