புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு – சஜித் எச்சரிக்கை!
இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (06) நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அவர், அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, Adrenaline, Atropine, Piriton, Ondansetron, Maxolon, Phenergan மற்றும் Hydrocortisone உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மருந்துகளில் சில தனியார் மருத்துவமனைகளில்கூட கிடைப்பதில்லை எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, இதனால் நோயாளர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு, ஏற்கனவே மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுவரும் நோயாளர்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் எச்சரித்தார்.
எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களிலும் அத்தியாவசிய மருந்துகளின் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.