இலங்கையின் சுற்றுலாத்துறையில் போதைப்பொருள் பாவனையைத் தடுக்க விசேட விழிப்புணர்வுத் திட்டம்!
இலங்கையின் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையில் பணியாற்றுவோர் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான கவலைகளைத் தொடர்ந்து, அத்துறையை இலக்காகக் கொண்டு விசேட போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுத் திட்டமொன்றை புனர்வாழ்வு பணியகம் ஆரம்பித்துள்ளது.
சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையில் பணியாற்றுவோர் மத்தியில் நிலவும் போதைப்பொருள் பாவனைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், அத்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு பணியகத்தின் ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி புனர்வாழ்வு சேவைகளை நாடியவர்களில் 14 சதவீதமானோர் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு, குறித்த துறையில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கான இலக்கு வைக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கம்பஹா மாவட்டம் மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் ஏற்கனவே விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் அடுத்தகட்டமாக, எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி சிகிரியா மற்றும் தம்புள்ளை பகுதிகளில் உள்ள ஹோட்டல் பணியாளர்களை இலக்காகக் கொண்டு மற்றுமொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் பணியாற்றுவோர் மத்தியில் போதைப்பொருள் பாவனையின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அத்துறையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என பிரிகேடியர் எம்.எஸ். அமித் மேலும் தெரிவித்துள்ளார்.