சோமாவதிய தேசிய பூங்காவிற்குள் கஞ்சா பயிர்ச்செய்கை – சந்தேகநபர் கைது!
சோமாவதிய தேசிய பூங்காவிற்குள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து, இரண்டு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த நவம்பர் 2ஆம் திகதி சோமாவதிய தேசிய பூங்காவின் டோசர் பிடிய பிரதேசத்திற்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு இடங்களில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் அரை ஏக்கர் வனப்பகுதியும், மற்றுமொரு இடத்தில் ஒரு ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கந்தளாய் வனஜீவராசிகள் அலுவலகம், கவுடுல்ல தேசிய பூங்கா அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, மேலும் இரண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த நவம்பர் 4ஆம் திகதி ஹிங்குராங்கொட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.