2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கமைய, நவம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் நாடாளுமன்றக் கட்டடம் முழுவதும் பாதுகாப்புப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதிக பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களிலும் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அன்றைய தினம் நாடாளுமன்றப் பொது பார்வையாளர் கூடத்திற்குள் அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும். இந்த அழைப்பிதழ்கள் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்படவுள்ளன.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை தமது சாரதிகளுடன் வருகை தருமாறும், விருந்தினர்களை அழைத்து வருவதைத் தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
தமது வாகனங்களைத் தாங்களே செலுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக, உறுப்பினர்கள் நுழைவாயில், பணியாளர்கள் நுழைவாயில் மற்றும் பொதுமக்கள் நுழைவாயில் ஆகிய இடங்களில் நாடாளுமன்ற சாரதிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்ற வாகனத் தரிப்பிடம் மூடப்படவுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மாற்று இடங்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அழைப்பிதழ் பெற்ற விருந்தினர்கள், ஜயந்திபுர நுழைவாயிலில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் தமது அழைப்பிதழ்களைச் சமர்ப்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே பொதுமக்கள் நுழைவாயில் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து முகாமைத்துவத் திட்டத்தைப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களும் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளன.
இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயற்படுத்துவதற்கு நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.