செவ்வாய் கிரகத்தின் மர்ம நிலவுகளை ஆய்வு செய்ய ஜப்பானின் புதிய விண்வெளித் திட்டம்!

arvloshan.com

செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் போபோஸ் (Phobos), டெய்மோஸ் (Deimos) ஆகிய இரு நிலவுகளின் தோற்றம் மற்றும் அவற்றின் தன்மைகளை ஆராய்வதற்காக ஜப்பான் தலைமையில் புதிய விண்வெளித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், போபோஸ் நிலவில் தரையிறங்கி பாறைகள் மற்றும் தூசு மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டுவர விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

செவ்வாய் நிலவுகள் ஆய்வு (Martian Moons eXploration – MMX) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், சூரியக் குடும்பத்தின் உருவாக்கம் தொடர்பான முக்கியமான பல மர்மங்களுக்கு விடை காண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், அதைச் சுற்றிவரும் இந்த இரு சிறிய நிலவுகள் எவ்வாறு உருவாகின என்பது தொடர்பாக விஞ்ஞானிகளிடம் இதுவரை உறுதியான முடிவு இல்லை.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், பிரான்ஸின் தேசிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜெர்மன் விண்வெளி ஆய்வு மையம் ஆகியவையும் இந்தத் திட்டத்திற்கான அறிவியல் உபகரணங்களை வழங்குகின்றன.

நிலவுகளின் தோற்றம் குறித்த மர்மம்

1877ஆம் ஆண்டு அமெரிக்க வானியலாளர் அசாப் ஹால், செவ்வாய் கிரகத்தின் இந்த இரு நிலவுகளையும் கண்டறிந்தார். ரோமப் புராணங்களில் செவ்வாய் கடவுளின் புதல்வர்களாகக் குறிப்பிடப்படும் போபோஸ், டெய்மோஸ் ஆகியோரின் பெயர்கள் அவற்றுக்கு வழங்கப்பட்டன. போபோஸ் என்பது அச்சத்தையும், டெய்மோஸ் என்பது பீதியையும் குறிக்கின்றன.

இந்த இரு நிலவுகளும் ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்ட சிறிய பாறை அமைப்புகளாக உள்ளன. பல தசாப்தங்களாகச் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் விண்கலங்கள் அவற்றைப் படம்பிடித்து ஆய்வு செய்துள்ளன. செவ்வாய் கிரகத்தில் இயங்கும் கியூரியாசிட்டி மற்றும் பெர்சவரன்ஸ் ரோவர்களும், போபோஸ் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்லும்போது ஏற்படும் சூரிய மறைவு நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளன.

எனினும், இவ்வளவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் அவற்றின் தோற்றம் குறித்த புதிர் இன்னும் தீர்க்கப்படவில்லை.

நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டேனியல் கிளாவின் உள்ளிட்ட ஆய்வாளர்கள், போபோஸ் மற்றும் டெய்மோஸின் தோற்றத்தைக் கண்டறிவது சூரியக் குடும்பம் எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்துகொள்வதில் முக்கியமானதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலவுகள் எவ்வாறு உருவாகின என்பது குறித்து தற்போது இரண்டு முக்கியக் கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவது கருதுகோளின்படி, மிகப்பெரிய விண்பொருளொன்று செவ்வாய் கிரகத்துடன் மோதியபோது சிதறிய பாறைப் பொருட்கள் ஒன்றிணைந்து இந்த இரு நிலவுகளாக உருவாகியிருக்கலாம்.

இரண்டாவது கருதுகோளின்படி, செவ்வாய் கிரகத்திற்கு அருகில் வந்த சிறுகோள்கள் அதன் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, அதைச் சுற்றிவரும் நிலவுகளாக மாறியிருக்கலாம்.

ஆனால், இதுவரை கிடைத்துள்ள தரவுகள் இந்த இரண்டு கருதுகோள்களுடனும் முழுமையாகப் பொருந்தவில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

போபோஸ் நிலவில் தரையிறங்கும் விண்கலம்

இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காக, செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள போபோஸ் நிலவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை, டெய்மோஸ் நிலவையும் விண்கலம் படம்பிடித்து ஆய்வு செய்யும்.

போபோஸ் நிலவு தற்போது ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் சுமார் 1.8 மீற்றர் என்ற அளவில் செவ்வாய் கிரகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் தற்போதைய நகர்வு தொடர்ந்தால், சுமார் ஐந்து கோடி ஆண்டுகளில் அது செவ்வாய் கிரகத்துடன் மோதக்கூடும் அல்லது சிதறி அதைச் சுற்றிய பாறை வளையமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

போபோஸின் மேற்பரப்பில் உள்ள ஸ்டிக்னி (Stickney) பள்ளம் அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். சுமார் 9.7 கிலோமீற்றர் அகலமுள்ள இந்தப் பள்ளம், அந்தச் சிறிய நிலவின் மேற்பரப்பில் குறிப்பிடத்தக்க பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

மறுபுறம், டெய்மோஸ் செவ்வாய் கிரகத்திலிருந்து மெதுவாக விலகிச் செல்கிறது. போபோஸுடன் ஒப்பிடும்போது அதன் மேற்பரப்பு மென்மையாகத் தோன்றினாலும், அங்கு ஏராளமான பள்ளங்களும் தூசுப் படிவங்களும் காணப்படுகின்றன.

இந்த இரு நிலவுகளிலும் காணப்படும் வேறுபாடுகள் அவை எவ்வாறு உருவாகின என்பதை அறிய முக்கியமான தடயங்களாக அமையலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2031ஆம் ஆண்டு பூமிக்குத் திரும்பும் மாதிரிகள்

இந்தத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள விண்கலம், உந்துவிசை, ஆய்வு மற்றும் பூமிக்குத் திரும்புதல் ஆகிய பணிகளுக்கான மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு விண்கலத்துக்கு சுமார் ஓராண்டு தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், சுமார் மூன்று ஆண்டுகள் போபோஸ் நிலவைச் சுற்றி ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தில் 'ஐடெஃபிக்ஸ்' (Idefix) எனப்படும் சிறிய ஆய்வு ரோவரும் இணைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோவர், போபோஸ் நிலவின் மேற்பரப்பில் இறங்கி அங்குள்ள பாறைகள், தூசுகள் மற்றும் தரை அமைப்புகளை ஆராயும்.

2029ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இந்த ரோவரை நிலவில் இறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஆய்வுகளின் அடிப்படையில், மாதிரிகளைச் சேகரிப்பதற்கான பாதுகாப்பான தரையிறங்கும் இடங்களை விஞ்ஞானிகள் தெரிவுசெய்வார்கள்.

சுமார் 25 கிலோகிராம் எடையுள்ள இந்த ரோவர், போபோஸின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை காரணமாக அங்கு மிகவும் குறைந்த எடையையே உணரும். இதனால், அதன் தரையிறக்கமும் நகர்வும் பூமியில் அல்லது பெரிய கிரகங்களில் நடைபெறும் செயல்பாடுகளிலிருந்து வேறுபடும்.

ரோவர் சுமார் 100 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு இடங்களில் மாதிரிகள் சேகரிப்பு

போபோஸ் நிலவின் ஒரு பகுதி ஒளிர்வாகவும் மற்றொரு பகுதி இருண்டதாகவும் காணப்படுவதால், அதன் இரு வெவ்வேறு பகுதிகளிலிருந்து மாதிரிகளைச் சேகரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, செவ்வாய் கிரகத்தை நோக்கியுள்ள போபோஸின் பக்கத்திலிருந்தும், அதற்கு எதிர்ப்புறமாக உள்ள பகுதியிலிருந்தும் மாதிரிகள் பெறப்படும்.

இந்தச் செயல்பாடு மிகவும் ஆபத்தானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முதலாவது இடத்தில் தரையிறங்கி மாதிரிகளைச் சேகரித்த பின்னர், விண்கலம் மீண்டும் மேலெழுந்து சுற்றுப்பாதைக்குத் திரும்பும். அதன்பின், இரண்டாவது தரையிறங்கும் இடத்தைத் தெரிவுசெய்ய மேலும் சில மாதங்கள் தேவைப்படலாம்.

மாதிரிகளைச் சேகரிக்க இரண்டு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

முதலாவது கருவி, போபோஸின் மேற்பரப்பில் சுமார் இரண்டு சென்ரிமீற்றர் ஆழம் வரை துளையிட்டு உட்பகுதியிலுள்ள பொருட்களைச் சேகரிக்கும். இரண்டாவது கருவி, அழுத்தப்பட்ட வாயுவைப் பயன்படுத்தி மேற்பரப்பிலுள்ள தூசுகளையும் சிறிய துகள்களையும் கிளறி அவற்றைச் சேகரிக்கும்.

இந்த முறைகள் மூலம் கிடைக்கும் மாதிரிகள் பாதுகாப்பாக விண்கலத்தில் சேமிக்கப்பட்ட பின்னர், அது டெய்மோஸ் நிலவைப் பற்றிய மேலதிக அவதானிப்புகளையும் மேற்கொள்ளும்.

அதனைத் தொடர்ந்து, 2030ஆம் ஆண்டு பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கி, 2031ஆம் ஆண்டு மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தது 10 கிராம் மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயிரின் தோற்றம் குறித்தும் ஆய்வு

போபோஸ் மற்றும் டெய்மோஸ் நிலவுகள் எவ்வாறு உருவாகின என்பதைத் தெரிந்துகொள்வதுடன், உயிரினங்களின் தோற்றம் குறித்த ஆய்வுகளுக்கும் இந்தத் திட்டம் உதவக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள காமா கதிர்கள் மற்றும் நியூட்ரான்களை அளவிடும் கருவி, இந்த நிலவுகளில் ஹைட்ரஜன், சோடியம், குளோரின் போன்ற வேதியியல் தனிமங்கள் எந்த அளவில் உள்ளன என்பதை ஆராயும்.

மேலும், அகச்சிவப்பு நிறமாலைமானி மூலம் கனிமங்கள், கரிமப் பொருட்கள் மற்றும் நீருடன் தொடர்புடைய பொருட்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இந்தத் தரவுகள், போபோஸ் ஒரு பெரிய மோதலின் விளைவாக உருவானதா அல்லது ஈர்ப்பு விசையால் பிடிக்கப்பட்ட சிறுகோளா என்பதைத் தீர்மானிப்பதற்கு உதவக்கூடும்.

போபோஸ் செவ்வாய் கிரகத்தின் சிதறிய பாறைப் பொருட்களால் உருவாகியிருந்தால், அந்த மாதிரிகளில் செவ்வாய் கிரகத்தின் பழங்காலப் பொருட்களின் தடயங்கள் காணப்படலாம். இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் ஆரம்பகால நிலைமைகள் மற்றும் அதன் வேதியியல் அமைப்பு குறித்து புதிய தகவல்களைப் பெற முடியும்.

அதேபோல், போபோஸ் ஒரு சிறுகோளாக இருந்தால், அது சூரியக் குடும்பத்தின் வெளிப்புறப் பகுதிகளிலிருந்து நீர் மற்றும் பிற ஆவியாகக்கூடிய வேதியியல் பொருட்களைக் கொண்டு வந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அத்தகைய பொருட்களில் உயிரின் அடிப்படை உருவாக்கத்துக்குத் தேவையான கரிம மூலக்கூறுகள் இருந்தால், செவ்வாய் கிரகத்தில் உயிர் உருவாவதற்கான ஆரம்பகட்டச் சூழல்கள் குறித்து அறியவும் வாய்ப்புள்ளது.

இந்த மாதிரிகளில் அமினோ அமிலங்கள் உள்ளிட்ட புரதங்களை உருவாக்க உதவும் மூலக்கூறுகளையும், உயிரின் வேதியியல் அடிப்படைகளாகக் கருதப்படும் பிற பொருட்களையும் விஞ்ஞானிகள் தேடவுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் வரலாற்றை அறிய புதிய வாய்ப்பு

போபோஸ் மற்றும் டெய்மோஸ் ஆகியவை பல பில்லியன் ஆண்டுகளாக இருந்து வரக்கூடும் என்பதால், அவை செவ்வாய் கிரகத்தின் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத் தடயங்களைப் பாதுகாத்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்திலிருந்து வெளியேறிய தூசுகள் மற்றும் பாறைத் துகள்கள் போபோஸின் மேற்பரப்பில் படிந்திருக்கலாம். எனவே, அங்கிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளில் செவ்வாய் கிரகத்தின் பொருட்களும் கலந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள், எதிர்காலத்தில் மனிதர்களைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் உதவக்கூடும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், சீனாவும் செவ்வாய் கிரகத்திலிருந்து நேரடியாக மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டுவரும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2028ஆம் ஆண்டு ஏவப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தியான்வென்-3 (Tianwen-3) திட்டமும் 2031ஆம் ஆண்டு மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜப்பானின் MMX திட்டம் வெற்றியடைந்தால், செவ்வாய் கிரகத்தின் இரு மர்ம நிலவுகள் குறித்த பல தசாப்தகாலக் கேள்விகளுக்கு விடை கிடைப்பதுடன், சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் உயிரின் ஆரம்பம் குறித்த ஆய்வுகளிலும் புதிய அத்தியாயம் திறக்கப்படலாம்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி AI உள்ளிட்ட 40 தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க சீனா திட்டம்!

...

arvoshan.com

பறக்கும் திறன் கொண்ட புதிய டெஸ்லா ரோட்ஸ்டரை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!

...

arvoshan.com

ஆப்பிள் மீது OpenAI வர்த்தக இரகசியக் குற்றச்சாட்டு!

...

arvoshan.com

வீட்டு உபயோகத்திற்காக 'ஹோம்வியூ' ஸ்மார்ட் சாதனத்தை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்!

...

arvoshan.com

டிக் டாக் செயலிக்கு எதிராக நியூயோர்க்கில் வழக்கு: சிறுவர்களுக்கு ‘போலி’ பாதுகாப்பு அம்சங்கள் வழங்கி மோசடி

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோசாப்ட்

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு சர்ச்சை: நிகான் அறிவியல் ஒளிப்பட போட்டி வெற்றிப் பதிவு மீண்டும் ஆய்வு!

...

arvoshan.com

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி: எலான் மஸ்க் சர்ச்சைக் கருத்து

...

arvoshan.com

சமூக ஊடகங்களால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: ஆய்வில் தகவல்!

...

arvoshan.com

பாதுகாப்புக் கவலைகளைத் தவிர்த்து புதிய செயற்கை நுண்ணறிவு முகவரை அறிமுகப்படுத்தியது ஒபன்ஏஐ!

...

arvoshan.com

ஷைனிஹன்டர்ஸ் ஊடுருவல் வழக்கு: ‘திருந்திய ஹேக்கர்’ நெதர்லாந்தில் கைது

...

arvoshan.com

மண்ணில் விழுந்து தீப்பற்றியது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்: சுற்றுவட்டப்பாதையை அடைந்து புதிய சாதனை!

...

arvoshan.com

அப்பிள் நிறுவனத்திற்கு 5.7 பில்லியன் டொலர் நஷ்டஈடு: காப்புரிமை மீறல் வழக்கில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

...

arvoshan.com

சாட்ஜிபிடியுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு

...

arvoshan.com

OpenAI செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அமெரிக்க அரசு இணையதளங்களில் அத்துமீறல்!

...