நைஜீரியாவில் விஷ மதுபானம் அருந்தி 48 பேர் பரிதாப பலி: 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
நைஜீரியாவின் தென்பகுதியில் மீதைல் மதுசாரம் கலக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் தயாரிப்பு விஷ மதுபானத்தை அருந்தியதில் குறைந்தபட்சம் 48 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒண்டோ (Ondo) மாநிலத்தின் சுகாதார ஆணையாளர் பான்கி அஜாகா இது குறித்துத் தெரிவிக்கையில், ஒடிக்போ மற்றும் இரெலே ஆகிய உள்ளூர் நிர்வாகப் பகுதிகளில் இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை மொத்தம் 182 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட 32 வயதான சோலா அடேபாயோ மருத்துவமனைப் படுக்கையிலிருந்து ஊடகமொன்றிற்கு வாக்குமூலமளிக்கையில், "நான் வெள்ளிக்கிழமை இரு வேளை அருந்திவிட்டு வெளியில் சென்றேன். சனிக்கிழமையன்று எனக்குக் கண் பார்வை மங்கத் தொடங்கி, பார்வை முற்றாகப் பறிபோனது" எனத் தனது சோகமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
நைஜீரியாவின் கிராமப்புறங்களில் மலிவு விலையிலும், முறையான ஒழுங்குமுறைகள் இல்லாமலும் விற்பனை செய்யப்படும் இத்தகைய உள்ளூர் மதுபானங்களை அருந்தும் பழக்கம் மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.
இவ்விஷயம் குறித்து விரிவாகப் பேசிய சுகாதார ஆணையாளர், "இந்த நச்சுத்தன்மை மிக வேகமாக உடலில் பரவுகிறது. அருந்தும் அளவைப் பொறுத்து, சிறுநீரகச் செயலிழப்பு, பார்வையிழப்பு மற்றும் மூளைக் கோளாறுகள் உடனடியாக ஏற்படுகின்றன" என எச்சரித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஒண்டோ மாநிலக் காவல் துறைப் பேச்சாளர் அபயோமி ஜிமோ (Abayomi Jimoh) வெளியிட்டுள்ள அறிக்கையில், மீதைல் மதுசாரம் கலந்த மதுபான உற்பத்தியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களிடையேயான தகவல்களின்படி, அதிக மதுசார அளவு கொண்ட "மங்கி டேல்" (Monkey Tail) எனப்படும் பிரபல மூலிகை மதுபானத்தில் மீதைல் மதுசாரம் கலக்கப்பட்டதே இந்த பெருஞ்சோகத்திற்கு முதன்மை காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
நைஜீரியாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கட்டுப்பாட்டு முகவரகமானது , சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய பிளாஸ்டிக் கொள்கலன்கள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே நாடு தழுவிய தடையை அமல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.