வட கொரியாவுக்கு இழப்பீடு விதிக்க தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு
வட கொரியாவின் கேசொங் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த இரு நாடுகளுக்குமான கூட்டுத் தொடர்பு அலுவலகத்தை 2020ஆம் ஆண்டில் வெடிவைத்துத் தகர்த்ததற்காக, தென் கொரியாவுக்கு 44.6 பில்லியன் வோன் (Won) - அதாவது 32.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என வட கொரியாவுக்குச் சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான அணுஆயுதப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் இக்கட்டடம் தகர்க்கப்பட்டது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் முறிவடைந்துள்ள நிலையில், இந்த இழப்பீட்டுத் தொகையை வட கொரியாவிடமிருந்து பெறுவதற்கான முறையான வழிமுறைகள் ஏதும் தென் கொரியாவிடம் இல்லை என்பதால், தீர்ப்பு குறியீட்டு ரீதியிலான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தனிநபர்கள் வட கொரிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ள போதிலும், தென் கொரிய அரசாங்கமே பியோங்யாங்கிற்கு (Pyongyang) எதிராக வழக்குத் தொடர்ந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். தென் கொரியப் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளதோடு, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இராஜதந்திர உறவுகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், தெற்கிலிருந்து வட கொரிய எதிர்ப்புப் பிரச்சாரத் தாள்கள் பலூன்கள் மூலம் அனுப்பப்படுவதைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி, கேசொங் நகரிலிருந்த நான்கு மாடி கூட்டுத் தொடர்பு அலுவலகக் கட்டடத்தை வட கொரியா வெடிவைத்துத் தகர்த்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஜனவரி முதலே கட்டடம் மூடப்பட்டிருந்ததால், இச்சம்பவத்தின் போது கட்டடத்தினுள் எவரும் இருக்கவில்லை.
ஆளில்லா விமானங்கள் இயக்கியவர்களுக்குத் தண்டனை:
இதேவேளை, கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில், எல்லைப் பகுதிகளிலிருந்து வட கொரியாவை நோக்கி ஆளில்லா விமானங்களை இயக்கி வான்வெளி பாதுகாப்புச் சட்டங்களை மீறிய குற்றத்துக்காக மூவருக்குச் சியோல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. வட கொரியா இச்செயற்பாட்டுக்குக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த நிலையிலேயே நீதிமன்றம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.