இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி வருமானம் 15.5% வீழ்ச்சி!
இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT/BPO) சார்ந்த சேவைகளின் ஏற்றுமதி வருமானம், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 15.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அண்மைய வெளித்துறை செயல்திறன் அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இத்துறையின் வருமானம் 524.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 621 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளின் வருமானம் 7.2 சதவீதத்தால் குறைந்து 65 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இந்த வருமானம் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
எவ்வாறாயினும், செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த சேவை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு செப்டெம்பரில் மொத்த சேவை வருமானம் 11.2 சதவீதத்தால் அதிகரித்து 559.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதன் பெறுமதி 503.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இருப்பினும், 2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான ஒன்பது மாத காலப்பகுதியில் ஒட்டுமொத்த சேவை வருமானம் 0.6 சதவீதத்தால் சிறிதளவு வீழ்ச்சியடைந்து 5.26 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், கடல் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் மூலம் கிடைத்த வருமானம் செப்டெம்பர் மாதத்தில் 46.3 சதவீதத்தால் அதிகரித்து 199 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் சேவைகள் கணக்கின் ஒட்டுமொத்த உபரி 22.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 2.21 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.