மீண்டும் இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள்!
ஐரோப்பிய நாடுகளின் குளிர்கால சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு, மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு மீண்டும் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன.
இதன்படி, ரஷ்யாவைத் தளமாகக் கொண்ட Azur Air விமான நிறுவனம் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
அதேவேளை, பிரான்ஸின் French Bee விமான நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான பருவகால விமான சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளது. இந்த விமானங்கள் மாலைதீவு ஊடாக இயக்கப்படவுள்ளன.
இதற்கிடையில், ரஷ்யாவின் மற்றுமொரு விமான நிறுவனமான S7 Airlines, சைபீரியாவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவைகளை டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்க் நகரிலிருந்து கொழும்புக்கு வாரத்திற்கு இரண்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஐரோப்பிய குளிர்கால சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.