வாகன இறக்குமதிச் செலவில் செப்டம்பரில் 34.4% வீழ்ச்சி!
இலங்கையின் வாகன இறக்குமதிக்கான செலவு, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 34.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அண்மைய வெளித்துறை செயல்திறன் அறிக்கையின்படி, தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்காக செப்டெம்பர் மாதத்தில் 188 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், வாகன இறக்குமதிச் செலவில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.
எனினும், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை மொத்தமாக 1.87 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் இறக்குமதிக்கான செலவு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.9 சதவீதத்தால் அதிகரித்து 2.11 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்தத் தொகை 2.05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
மேலும், 2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்த இறக்குமதிச் செலவு 18.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21.3 சதவீத அதிகரிப்பாகும்.
இதேவேளை, இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 910 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் 731 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
ஆனால், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.