ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய மின்தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகின் செயலிழப்பே காரணம் – ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை
ஒக்டோபர் 17ஆம் திகதி இலங்கை முழுவதும் ஏற்பட்ட பாரிய மின்தடை, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி அலகு திடீரெனச் செயலிழந்ததன் காரணமாகவே ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மின்கட்டமைப்பு இயக்குநரால் (NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மின் உற்பத்தி அலகிலிருந்து 187 மெகாவோட் மின்சாரம் காலை 11.43 மணியளவில் வெறும் 450 மில்லி செக்கன்களுக்குள் திடீரெனத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், மின்கட்டமைப்பின் அதிர்வெண் 48.75 ஹேர்ட்ஸாக வீழ்ச்சியடைந்ததுடன், அடுத்த 4.1 செக்கன்களுக்குள் நாட்டின் முழுமையான மின்கட்டமைப்பும் செயலிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டமைப்பை நிலைப்படுத்தும் நோக்கில், குறைந்த அதிர்வெண் காரணமாக மின்சாரத்தைத் துண்டிக்கும் ஐந்து கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் (UFLS) செயல்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இந்த நடவடிக்கைகளால் மின்கட்டமைப்பு வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.
மின்தடை ஏற்படுவதற்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 1,135 மெகாவோட் மின்சாரத்தில், 449.2 மெகாவோட் மின்சாரம், அதாவது 39.6 சதவீதமான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவெவ மற்றும் லக்ஷபான உள்ளிட்ட பல நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தி அலகுகளும் பாதுகாப்பு கட்டமைப்புகள் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தானாகவே செயலிழந்துள்ளன.
சம்பவம் இடம்பெற்ற உடனேயே மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் ஆரம்பித்துள்ளார்.
மகாவலி, லக்ஷபான, சமனலவெவ/தெற்கு மற்றும் கொழும்பு ஆகிய நான்கு மின்விநியோகக் கட்டமைப்புகள் ஊடாக, பல நீர்மின் நிலையங்கள் மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் உதவியுடன் மின்சார விநியோகம் படிப்படியாக மீளமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து பிரதான மின் துணைநிலையங்களும் பிற்பகல் 4.58 மணியளவில் மீளச் செயற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் முழுமையான மின்கடத்தல் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவருவதற்கு ஐந்து மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் எடுத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை மீளமைக்கும் நடவடிக்கைகளின்போது சில மின் உற்பத்தி அலகுகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் செயற்பாட்டு தாமதங்களும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் துணை அமைப்பொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அங்குள்ள மின் உற்பத்தி அலகொன்றை மீண்டும் செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகு திடீரெனச் செயலிழந்தமைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து, மேலதிக அறிக்கையொன்றை பின்னர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளது.