‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு ஆரம்பம் – முதல் தோற்றம் வெளியீடு!
இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 5) ஆரம்பமாகியுள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுடன், படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது.
‘தமிழ்ப் படம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களையும் இணைந்து தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள முதல் தோற்றத்தில், நடிகர் சிவா வானத்திலிருந்து இறங்கும் பறக்கும் தட்டு ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், படத்தின் தலைப்புக்குக் கீழே ‘ஏலியன் அத்தியாயம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிவாவுக்கு வழக்கமாக வழங்கப்படும் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துக்குப் பதிலாக, இம்முறை ‘Intergalactic Superstar’ (விண்மண்டல சூப்பர் ஸ்டார்) என்ற புதிய பட்டம் இடம்பெற்றிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏபி இன்டர்நேஷனல் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். இதில் மிர்ச்சி சிவாவுடன் நடிகை அதுல்யா ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ்ப் படம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்த இந்தப் படம், தமிழ் சினிமாவில் நிலவும் வழக்கமான திரைப்பட பாணிகள் மற்றும் நடிகர்களின் நடிப்புச் செயல்பாடுகளை நகைச்சுவையாகக் கிண்டல் செய்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2018ஆம் ஆண்டு ‘தமிழ்ப் படம் 2’ வெளியானது. இந்தப் பாகத்தில் ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் தமிழ் சினிமாவின் பொலிஸ் கதாபாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நகைச்சுவையாகப் பகடி செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சி.எஸ்.அமுதன் - மிர்ச்சி சிவா கூட்டணி ‘தமிழ்ப் படம் 3’ மூலம் இணைந்துள்ளது.
படத்தின் முதல் தோற்றத்தைப் பார்க்கும்போது, இம்முறை விண்வெளி, வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அறிவியல் புனைகதைத் திரைப்படங்கள் ஆகியவை நகைச்சுவைப் பகடிக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.